
பெண்களின் உரிமைகள் விட்டுக்கொடுப்பதா? பெற்றுக்கொள்வதா? (சிறப்புக் கட்டுரை)
சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ம் திகதி கொண்டாடப்படுகின்றமை யாவரும் அறிந்ததே. இம்முறை 'Choose to Challenge' எனும் தொனிப்பொருளில் இத்தினம் கொண்டாப்படுகின்றது. சவால்களைத் தேர்வு செய்வதை வலியுறுத்துவதே இதன் நோக்கமாகும்.
சுமார் நூறு வருடங்களுக்கு மேலாக குரல் கொடுத்து வருகின்ற இம்மகளிர் தினமானது 1911ஆம் ஆண்டே முதன் முறையாக கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
உலகளாவிய ரீதியில் கல்வியறிவில், அரசியல் மட்டத்தில், பொருளாதாரத்துறையில், மருத்துவத்துறையில் ஏன் விண்வெளி ஆராய்ச்சி மையங்களில் கூட பெண்களின் கால் தடம் பதிந்துள்ளமை பெருமைக்குரிய விடயமாகும்.
பல்வேறு உயரிய பதவிகளிலும், பற்பல கண்டுபிடிப்புக்களிலும் பெண்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளமை வரவேற்கத்தக்கது. ஆயினும் அடிமட்டத்தில் உள்ள பெண்களின் நிலைமை இன்னும் கவலைக்கிடமானதாகவே உள்ளது.
தற்காலத்தில் பெண்களுக்கென்று பல்வேறு அமைப்புக்கள், எழுச்சிமையங்கள், மாதர் சங்கங்கள் என பல உருவாக்கப்பட்டிருப்பினும் சில நாடுகளில் பெண்கள் இன்னும் அடிமட்டத்தில் இருந்து வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
எமது நாட்டை எடுத்துக் கொண்டால் பெண்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கமோ அல்லது எந்தவொரு சமூக அமைப்போ முன்வந்ததாக தெரியவில்லை.
தங்களது அடிப்படைப் பிரச்சனைகளிலிருந்து மீளமுடியாத பெண்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்வதையே முழு மூச்சாகக் கருதுகின்ற வேளையில் அவர்களது கல்வி நடவடிக்கைகள் குறித்தோ அல்லது உரிமைகள் குறித்தோ எந்தவொரு பெண்ணாலும் சிந்திக்க முடிவதில்லை. இதனைக் கண்டுகொள்வோர் ஒருவருமில்லை.
கல்வியில் பின்தங்கிய நிலையிலிருக்கும் பெண்கள் அவர்களின் உரிமைகளைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அவ்வாறு தெரிந்து வைத்திருப்பினும் அவர்களை மிக இலகுவாக ஏமாற்றிவிடுகிறது நம் சமூகம். ஒரு தசாப்தத்தைக் கடந்தபோதிலும்கூட இன்னும் பெண்களின் உரிமைகள் பற்றிய விளக்கம் அவர்களிடத்திற்கே போய்ச் சேரவில்லை என்பதே உண்மை.
இது ஒரு சமூகப் பிரச்சினை மட்டுமல்ல. இது ஒரு குடும்பப் பிரச்சினையும் கூட. ஒவ்வொரு குடும்பத்திலும் பெண் பிள்ளைகளுக்கான கல்வி மற்றும் உரிமைகளை கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டும்.
ஓவ்வொரு குடும்பத்திலும் பெண்களை விட்டுக்கொடுத்து வாழச் சொல்கிறார்களேயொழிய அவர்களின் உரிமைகளை பெற்றுக்கொண்டு வாழச் சொல்லிக் கொடுப்பதில்லை. இதிலிருந்தே பெண்களின் உரிமைகள் மறைமுகமாக மறுக்கப்படுகின்றமை புலப்படுகின்றது.
உரிமைகள் என்று வரும்போது விட்டுக்கொடுக்க வேண்டியது எங்கே?, பெற்றுக்கொள்ள வேண்டியது எங்கே? என்று பிரித்தறியக்கூட தெரியாத பெண்கள்தான் அதிகளவில் விவாகரத்தை நாடுகின்றனர். தற்போது விவாகரத்து அதிகரித்து வருகின்றமைக்கான காரணமும் இதுதான்.
பெண்களாகிய நாம் எமது தேவைகளை மட்டுமல்லாது எமது பாதுகாப்பைப் பற்றியும் எதிர்கால சந்ததிகளாகிய எமது பிள்ளைச் செல்வங்களுக்கு எடுத்துக் கூறி வளர்க்க வேண்டும்.
உரிமைகள் என்பது வெளியில் அல்ல நமக்குள்தான் இருக்கிறது. நாம் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைக்கின்ற சில தேவைகளே உரிமைகளாக மாற்றம் பெறுகின்றன. அவற்றை உரியமுறையில் கையாளத் தெரிந்திருந்தால் எமது உரிமைகளை நாமே பெற்றுக் கொள்ளலாம்.
தற்காலத்தில் சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றமை இதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
வீட்டில், சமூகத்தில் பேசமுடியாத, பேசினாலும் விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் மத்தியில் நின்று ஓலமிடுவதைவிட தங்களின் கருத்துக்களையும், தேவைகளையும், ஆசைகளையும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துகொள்தல் இலகுவாக இருக்கின்றது.
குடும்பத் தலைவன் இல்லாத பல குடும்பங்களில் மாத்திரமல்ல தலைவன் இருக்கின்ற குடும்பங்களிலும்கூட பெண்கள் தங்களின் சுய முயற்சியாலேயே குடும்பத்தை நடாத்தி வருகின்றனர். உரிமைகள் மறுக்கப்படுவதென்பது முதலில் வீடுகளில் நிறுத்தப்பட வேண்டும். முரண்பாடான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றபோது வீடுகளில் மட்டுமல்ல சமூகத்திலும் உரிமைகள் மறுக்கப்படுகிறதென்பது தெளிவான உண்மை.
''மாதர்தமை இழிவுசெய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்று பாரதி பாடினான் அன்று. ஆனால், இவ்வாறு இழிவு செய்வோரை தண்டிப்பதற்கு இன்னும் ஒரு சட்டமோ, ஒழுங்கோ ஏற்படுத்தப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயம். எனவே, இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரையில் மாதரை இழிவு செய்வோரைக் கொளுத்துவோம் என்பதே சாலப் பொருந்தும்.
கற்புநெறி தவறாத பெண்களையே மணந்து கொள்ளவிரும்புகின்ற ஆண்களாலேயே பெண்களின் கற்பு சூறையாடப்படுகிறதே, இதற்கு என்ன தண்டனை? சிறுவர் மற்றும் பெண்களின் பாலியல் கொடுமைகளுக்கு இன்னும் சட்டத்தில் தண்டனை கண்டுபிடிக்கப்படவில்லைபோலும். இவ்வாறு பெண்களை இழிவு நிலைக்குத் தள்ளிவிடும் ஆண்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வதே சிறந்த தண்டனையாகும் என்பதே எனது நிலைப்பாடு. இது மனித உரிமைகள் அமைப்புக்களிடத்தில் மாத்திரமல்ல எமது நாட்டு ஜனாதிபதியிடமும் பரிந்துரைக்கப்படவேண்டிய விடயமாகும். பெண் பிள்ளைகளுள்ள, பெண்களின் நலனில் அக்கறைகொண்டுள்ள யாராலும் இதை மறுத்துப்பேச முடியாது.
எனவே, இனிவரும் நாட்களில்கூட பெண்களுக்கென்று கொடுத்துள்ள இந்த நாள் வெறுமனே 'மகளிர் தினம்' என்ற தலைப்பில் சில நிகழ்ச்சித் திட்டங்களை முன்வைக்கும் நாளாக அல்லாமல், இலங்கை வாழ் ஒட்டுமொத்த பெண்களின் நலனில் அக்கறைகாட்டும் நாளாக மாற்றப்பட வேண்டும். இலங்கைப் பெண்கள் எப்போது அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கிறார்களோ அன்றுதான் அவர்களுக்கு உண்மையான பெண்கள் தினம்! பெண்கள் எப்போது கண்ணீர் சிந்தாமல் வாழ்கிறார்களோ அப்போதுதான் உரிமைகளை வென்றதாக அர்த்தம் கொள்ள முடியும்.
- ஷாமலா ஸ்டீவன்