இலங்கையில் PCR பரிசோதனைகள் அதிகரிப்பு

இலங்கையில் PCR பரிசோதனைகள் அதிகரிப்பு

இலங்கையில் நேற்றைய (01) நாளில் மாத்திரம் 1,810 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இதுவரை 228,052 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டில் நேற்று (01) 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்ட நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,092 ஆக உயர்ந்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்களே நேற்று கொரோனா தொற்றுக்கு அதிகளவில் உள்ளாகியுள்ளனனர்.

அதன்படி குவைத்தில் இருந்து வந்த 6 பேரும் மாலைத்தீவில் இருந்து வந்த 6 பேரும் மற்றும் இந்தியாவில் இருந்து வந்த கடற்படை உறுப்பினர் ஒருவரும் நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதேபோல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகைத் தந்த ஒருவரும், இந்தியாவில் இருந்து வந்த 3 பேரும் கட்டாரில் இருந்து வந்த 26 பேரும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் என கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இதுவரை 2,883 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 197 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இதேவேளை, இன்று (02) காலை டுபாயில் இருந்து 29 சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும், கட்டாரில் இருந்து 57 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இன்று 402 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தல் நிறைவு செய்து வீடு திரும்பவுள்ளனர்.

35,338 பேர் இதுவரை தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இராணுவத்தால் பராமறிக்கப்படும் 70 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 7,990 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தொடர்ந்தும் வைரஸ் பரவல் குறித்து அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என வைத்திய பரிசோதனை நிலைய பணிப்பாளர் டொக்டர் ஜயமூவான் பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார்.