வாக்கு எண்ணும் நிலையத்தில் தாக்குதல் – யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
யாழ். மத்திய கல்லூரியில் பொதுத் தேர்தல் வாக்குகள் எண்ணும் நிலையத்தில் முடிவுகளுக்காகக் காத்திருந்த கட்சிகளின் ஆதரவாளர்களை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் தாக்கியதாக 3 பேர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
அவர்களில் இருவர் சிறப்பு அதிரடிப் படையினருக்கு எதிராகவும் ஒருவர் பொலிஸாருக்கு எதிராகவும் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறிப்பாக பொலிஸாரின் தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வலி. தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராசா துவாரகன், தன்னை பொலிஸார் சித்திரவதை செய்ததாக முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராகவே இவ்வாறு முறைபாடு பதிவு செய்துள்ளார்.
இஅதனையடுத்து, தவராசா துவாரகன் பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ நிபுணரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகம் கோரியிருந்தது.
இந்த நிலையில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் (இலங்கை தமிழ் அரசுக் கட்சி), முன்னாள் விடுதலைப்புலிகள் போராளி தனுபன் (இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்) ஆகியோரும் விசேட அதிரடிப் படையினருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.