பாராளுமன்றின் முழுமையான கணக்கறிக்கை மாத இறுதியில்
8ஆவது மற்றும் 9ஆவது பாராளுமன்ற அமர்வுகளின் நிதிப் பயன்பாடு குறித்து அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய முழுமையான தணிக்கையினை மேற்கொண்டு, அந்த அறிக்கைகளை பாராளுமன்றில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (29) காலை கண்டியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டார்.
இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அந்த தணிக்கை அறிக்கைகளை பாராளுமன்றத்திற்கு வழங்க கணக்காய்வாளர் நாயகம் உறுதியளித்துள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் நிதி தொடர்பான அனைத்து விடயங்களும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பாராளுமன்றத்தின் சில பிரிவுகள் இதற்கு முன்னர் கணக்காய்வாளர் நாயகத்தின் தணிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை நாம் அவதானித்தோம்.
எனவே, நிதிப் பயன்பாடு குறித்த வெளிப்படைத்தன்மையை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என நாம் கருதினோம்.
இதற்காக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் விக்ரமரத்னவை அழைத்து, 8ஆவது மற்றும் 9ஆவது பாராளுமன்ற அமர்வுகளின் முழுமையான தணிக்கையினைச் செய்து தருமாறு கோரினேன்.
பாராளுமன்றத்திற்காக செலவிடப்படும் மக்களின் பணம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு.
அதற்காகவே பாராளுமன்றத்தை தணிக்கைக்கு உட்படுத்துகிறோம். எதிர்காலத்தில் 10ஆவது பாராளுமன்றத்திலும் இந்தத் தணிக்கையை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.