பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் ஆட்சி அமைக்க விஜய் முன்னால் இருக்கும் வாய்ப்புகள் என்ன? - ஓர் பார்வை

பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் ஆட்சி அமைக்க விஜய் முன்னால் இருக்கும் வாய்ப்புகள் என்ன? - ஓர் பார்வை

தவெக முன்னிலை... 

தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் தனித்து களம் கண்ட விஜய்யின் தவெக போட்டியிட்ட 233 தொகுதிகளில் 111 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 

திமுக கூட்டணி 61 இடங்கள், அதிமுக கூட்டணி 61 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 

பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் மதியம் நிலவரப்படி இன்னும் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. 

தவெக வாய்ப்புகள்

தவெக பெரும்பான்மையை எட்டாவிட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.

பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் தவெக மற்ற கட்சிகளின் ஆதரவை நாடுமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்சி அமைக்க விஜய்யின் முன்னாள் சில வாய்ப்புகள் உள்ளன.

தவெக, அதிமுகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, விஜய் ஆகிய இருவருமே முதல்வர் பதவிக்கு குறைந்து எதையும் ஏற்கமாட்டார்கள் என்பதால் இந்த அசாத்திய கூட்டணியில் சவால்கள் உள்ளன.

அதேநேரம் விஜய் தனது பிரச்சாரத்தில் திமுகவை "அரசியல் எதிரி" என்றும், பாஜகவை "கொள்கை எதிரி" என்று வரையறுத்தார்.

எனவே அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் உள்ளதால் விஜய், அதிமுக ஆதரவை நாடுவது கொள்கைக்கு மாறான முடிவு ஆகும். ஒருவேளை பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டால் அதிமுக-தவெக கூட்டணி ஆட்சி அமைய அதிக வாய்ப்புள்ளது.

மறுபுறம் பாஜக-அதிமுக என்டிஏ கூட்டணி தமிழகத்திற்குள் வரக்கூடாது என்பதால் திமுக, தவெகவுக்கு ஆதரவு அளித்து ஆட்சி அமைக்கச் செய்யும் எனவும் ஒரு கணிப்பும் சிலரால் முன்வைக்கப்படுகிறது.

ஆனால் ஸ்டாலின் தலைமையிலான திமுகவை விஜய் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளதால், அவர்களுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு மிகக் குறைவு.

காங்கிரஸ் ஆரம்பம் முதலே விஜய் குறித்த பாசிட்டிவ் கண்ணோட்டத்தை கொண்டுள்ளதால் இந்த ஊகம் வலுத்துள்ளது. மறுபுறம், அதிமுகவில் இருந்து வெளிவந்து அன்புமணி பாமக விஜய்க்கு ஆதரவு வழங்கும் என்ற ஊகமும் உள்ளது.

தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, அன்புமணி பாமக, 5 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. விடுதலை சிறுத்தைகள் 2 இடங்களில், இந்திய கம்யூனிஸ்ட் 2 இடங்களில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களில், காங்கிரஸ் 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

மறுபுறம் தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் இறுதி முடிவை பொறுத்து விஜய் இறுதி முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.