
கொழும்பில் வயோதிபத் தம்பதி மீது கூரிய ஆயுதங்களால் கொடூர தாக்குதல்
வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத இருவர், அங்கிருந்த வயோதிபத் தம்பதியைக் கூரிய ஆயுதங்களால் தாக்கிப் படுகாயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பு - முகத்துவாரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது என்று முகத்துவாரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
68 வயதுடைய வயோதிபத் தம்பதியே இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர். இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியில் சென்ற இனந்தெரியாத இருவரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த வயோதிபப் பெண்ணுக்கும் வெளிநாட்டில் உள்ள அவரது சகோதரிக்கும் இடையில் உள்ள காணித் தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.