
யாழில் வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
சிறைகளுக்குள் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்தும் மற்றும் சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டியும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டத்திற்கு குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (05) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழினத்தை வேரறுக்கும் வரலாற்றின் முதல் அத்தியாயமான ஜூலைக் கலவரத்தின் சிறைப்படுகொலை நாளான ஜூலை 25 ஆம் திகதியை முன்னிறுத்தி, அரசியல் கைதிகளின் விடுதலைக்கான உணர்வுபூர்வமான போராட்டத்தை முனைப்புடன் முன்னெடுக்க குரலற்றவர்களின் குரல் அமைப்பு சகல தமிழ் சமூகங்களிடமும் அழைப்பு விடுக்கின்றது.
எதிர்வருகின்ற, 24 மற்றும் 25 ஆம் திகதிகளில், யாழ்ப்பாணம் (Jaffna) கிட்டு பூங்கா (சங்கிலியன் பூங்கா) சுற்றயலில் இடம்பெறும் இந்த நினைவேந்தல் செயற்பாட்டில் சமூக உணர்வு கொண்ட அனைத்துத் தரப்பினரும் தவறாது பங்கேற்று,ஒன்றிணைந்து குரல்களை உயர்த்தி உறவுகளின் விடுதலைக்கு அணி திரண்டு வலுச் சேர்ப்போம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.