
இலங்கையில் மலேரியா பரவல் குறித்து எச்சரிக்கை
மலேரியா இலங்கையில் பரவாமல் இருக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய மலேரியா தடை இயக்கத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் தயானந்தறூபன் தெரிவித்துள்ளார்.
மலேரியா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கை இன்றையதினம் (24.04.2025) புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“உள்நாட்டில் மலேரியா இல்லாத போதும் தற்போது மீண்டும் ஒரு மலேரியா எமது நாட்டிற்குள் வந்துவிடுகின்ற அபாய சூழ்நிலை காணப்படுகின்றது. தற்போது பல நாடுகளில் மலேரியா பரவல் காணப்படுகிறது.
குறிப்பாக ஆபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகள், தென்கிழக்காசிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் மலேரியா பரவல் உள்ளது.
அவ்வாறான நாடுகளிற்கு சென்று வருபவர்கள் மூலம் எமது நாட்டிற்குள் மலேரியா வந்தடைகின்றது. இவ்வாறான நாடுகளிற்கு செல்ல இருப்பவர்கள் முன் கூட்டியே அதற்குரிய தடுப்பு மருந்துகளை பெற்று சென்றால் மலேரியா நோய் ஏற்படாது தடுக்க முடியும்.
மீண்டும் மலேரியா என்ற ஒரு நோயினை இலங்கையில் ஏற்படுத்தி விட கூடாது என்பதற்காக நாங்கள் அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருகின்றோம். அதற்கு மக்களது ஒத்துழைப்பும் அவசியம் தேவை. ஒத்துழைப்பு கிடைக்கின்ற பட்சத்தில் ஆபத்திலிருந்து விடுவித்து கொள்ள முடியும்” என தெரிவித்துள்ளார்.