
இனி,'உனக்காக நான்.. எனக்காக நீ!'- திருமணம் செய்து கொண்ட தன்பால் ஈர்ப்பாளர் தம்பதி
எங்களுடைய திருமணம் கடவுள் சந்நிதானத்தில் கடவுளோட அருளால் நடந்துச்சு. கடவுள் எங்களை ஏத்துக்கிட்டார். சீக்கிரம் மக்களும் ஏத்துப்பாங்க!
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (08.07.22) இந்தத் தம்பதி மாலை மாற்றிக் கொண்டு தாலிக்கட்டி திருமணம் செய்திருக்கின்றனர். திருமணம் குறித்து அவர்களிடம் பேசினோம்.
கார்த்திக் - கிருஷ்ணா
புன்னகை ததும்ப பேசத் தொடங்கிய கிருஷ்ணா, "நாங்க ஏற்கெனவே சொல்லியிருந்த மாதிரி மோதிரம் மட்டும்தான் மாத்திக்கிட்டோம். ஆனாலும், எங்களுக்கு முறைப்படி நம்ம சம்பிரதாயத்தின்படி மாலை மாற்றி தாலி கட்டிக்கணும்னு ரொம்ப ஆசை. உரிமையா நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு அப்ப கெத்தா சொல்லிக்கலாம் என்கிற எண்ணமும் இருந்துச்சு. ஃப்ரெண்ட்ஸ்கிட்டலாம் கேட்டப்ப அவங்களும் இதுதான் நல்லதுன்னு சொல்லி தாலி கட்டிக்க சொன்னாங்க. ஆனாலும், கொஞ்சம் பதற்றமாகவே இருந்துச்சு. சரி கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஒரே வாரத்தில் முடிவு பண்ணிட்டேன். கார்த்திக்கிற்கு சர்ப்ரைஸாக இருக்கட்டும்னு இந்த விஷயத்தை சொல்ல வேண்டாம்னு நினைச்சேன். ஆனா, தாலி வாங்க ரெண்டு பேராகத்தான் போகணும்னு சொல்லிட்டேன். அவனுக்கு ரொம்ப சந்தோஷம்! சேலம் பக்கத்தில் ஒரு கிராமத்தில் கோயிலில் வச்சு திருமணம் செய்ய முடிவெடுத்தோம்.
திடீர்னு அந்தக் கோயிலில் எங்கத் திருமணம் நடக்க சம்மதிக்கலைன்னா வீட்டில் வச்சு திருமணம் பண்ணிக்கலாம்னு பல சிந்தனைகள் மனதில் ஓடிட்டே இருந்துச்சு. அன்றைக்குதான் சிவபெருமானுக்கும் திருமணம் நடந்திருக்கு. அந்தக் கோயிலும் சிவபெருமான் கோயில்தான்! விடியக் காலையில்தான் எங்க திருமணம் அங்க நடக்கிறதுக்கு அந்தக் கோயில் உரிமையாளர் உட்பட பலர் சம்மதம் சொன்னாங்க. அங்க 4 பெண் அடிகளாரும், ஒரு ஆண் அடிகளாரும் இருந்தாங்க. அவங்களுடைய தலைமையில் தான் எங்க திருமணம் நடந்துச்சு.
கார்த்திக் - கிருஷ்ணா
அந்தக் கோவிலில் பல மக்கள் சாமி கும்பிட வந்திருந்தாங்க. எல்லார் முன்னிலையிலும் எங்க திருமணம் நடந்துச்சு. என் கையால கார்த்திக்கிற்கு தாலி கட்டி, குங்குமம் வச்சிவிட்டேன். தாலியை கையில் வாங்குற வரைக்கும் மனசுல ஒரு பதட்டமும், பயமும் இருந்துட்டே இருந்துச்சு... தாலிங்கிறது மிகப்பெரிய பாரம்பரியம் என்பதும், யாராவது கல்யாணத்தை நிறுத்திடுவாங்களோ என்பதும் ஓடிட்டே இருந்துச்சு. ஆனா, என் கையால அந்த மூன்றாவது முடிச்சு போடும்போது என்னை அறியாமலேயே அழுதுட்டேன்.. இனி, 'உனக்காக நான்.. எனக்காக நீ' என்பதுதான் கார்த்திக்கிற்கு அந்த நொடி நான் சொல்ல நினைச்சது என்றதும் கார்த்திக் தொடர்ந்தார்.
கார்த்திக் - கிருஷ்ணா
ஆரம்பத்தில் மாலையும், கழுத்துமா உட்கார்ந்ததுல இருந்தே ஆனந்த கண்ணீர் வந்துட்டே தான் இருந்துச்சு. எங்களுடைய வாழ்க்கையில் இது மாதிரியெல்லாம் நடக்குமான்னுலாம் பலமுறை பேசி அதுக்காக ஏங்கியிருக்கோம். ஒரு வாரமா கல்யாணம் நல்லபடியா நடந்து முடியணும்னு தூக்கமே இல்ல. ஏதோவொரு பயமும், பதட்டமும் கிருஷ்ணா சொன்ன மாதிரி எங்களுக்குள் இருந்துட்டே தான் இருந்தது. கோவிலில் எங்களுக்கு திருமணம் நடக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டோம். அந்தக் கடவுள் முன்னாடி எங்க கல்யாணம் நடந்தது மிகப்பெரிய பாக்கியம்! என் கழுத்தில் இருக்கிற தாலி எங்களை இன்னும் அதிகமா நெருக்கமாக்கிடுச்சு. பொறுப்புகளும் அதிகமா வந்திருக்கு. பொதுவா கிருஷ்ணா ஷூட் எதாவது போகும்போது தனியா இருக்கிற ஃபீல் இருக்கும். இப்ப என் கழுத்தில் இருக்கிற தாலி அவர் என் கூடவே இருக்கிற உணர்வை கொடுக்குது என கண் கலங்கியவரை நிறுத்தி கிருஷ்ணா தொடர்ந்தார்.
எல்லாரும் ஹனிமூனுக்கு ஊட்டி, கொடைக்கானல் போகணும்னு முடிவெடுப்பாங்க. ஆனா, நாங்க ராமேஸ்வரம் போயிட்டு வரலாம்னு பிளான் பண்ணியிருக்கோம். எங்களுடைய திருமணம் கடவுள் சந்நிதானத்தில் கடவுளோட அருளால் நடந்துச்சு. கடவுள் எங்களை ஏத்துக்கிட்டார். சீக்கிரம் மக்களும் ஏத்துப்பாங்க.
எங்களுடைய திருமணத்தை முறைப்படி ரிஜிஸ்டர் பண்ண முடியலைங்கிற வருத்தம் நிறையவே இருக்கு. சட்டப்படி நாங்க திருமணம் பண்ணிக்கலாம்.. ஆனா, அதே சட்டத்தில் எங்க திருமணத்தை ரிஜிஸ்டர் பண்ண இடமில்லை. அது வேணும்னுதான் நாங்க போராடிட்டு இருக்கோம். நிச்சயம் எங்க போராட்டத்தில் வெற்றி பெற்று எங்களுடைய திருமணத்தை முறைப்படி பதிவு பண்ணுவோம்!' என்றார்.
வாழ்த்துகள் கார்த்திக் - கிருஷ்ணா!