தலவாக்கலை - லிந்துலை நகர சபையின், புதிய தவிசாளர் தெரிவுக்கான தேர்தலுக்கு இடைக்காலத் தடை

தலவாக்கலை - லிந்துலை நகர சபையின், புதிய தவிசாளர் தெரிவுக்கான தேர்தலுக்கு இடைக்காலத் தடை

இன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த தலவாக்கலை - லிந்துலை நகர சபையின், புதிய தவிசாளரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

நகர சபையின் முன்னாள் தவிசாளர் அசோக்க சேபாலவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அதிகார முறைக்கேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளினால் தலவாக்கலை - லிந்துலை  நகரசபையின் தலைவர் பதவியிலிருந்து  அசோக சேபால நீக்கப்பட்டிருந்தார்.

அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான வர்த்தமானியை, மத்திய மாகாண ஆளுநர் வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து, வெற்றிடமான தவிசாளர் பதவிக்கு, புதிய உறுப்பினரை நியமிப்பதற்கான தேர்தல் இன்று (31) இடம்பெற இருந்தது.

இந்த நிலையில், தாம் தெரிவாகிய சுயாதீன குழுவுக்கு அநீதி ஏற்படுவதனால், தமது குழுவுக்கு, உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படும் வரையில், தேர்தலை நடத்தாதிருப்பதற்கான தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் தவிசாளர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதற்கு முன்னர், கடந்த 5 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், கூட்டநடப்பு எண்ணுக்கான உறுப்பினர்கள் இல்லாதமையால், அந்த நடவடிக்கை பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது