
2013ஆம் ஆண்டு கிழக்கு மாகாண நீர் அபிவிருத்தித் திட்டத்தில் மோசடி
ஜெய்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன் 2013ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட கிழக்கு மாகாண நீர் அபிவிருத்தித் திட்டத்துக்காக DI குழாய்கள் மற்றும் துணைக் கருவிகளை இறக்குமதி செய்யும்போது இடம்பெற்ற மோசடி காரணமாக 6 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை அரசாங்கம் மேலதிகமாகச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 6 கோடியே 24 இலட்சத்து 99 ஆயிரத்து 656 ரூபாவை அரசாங்கம் மேலதிகமாகச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்குத் தேவையான DI குழாய்கள் மற்றும் துணைக் கருவிகளை இறக்குமதி செய்யும் பொறுப்பு திறைசேரியினால் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு வழங்கப்பட்டதுடன், இதற்கான ஒப்பந்தத்தை அக்சஸ் இன்டர்நெஷனல் தனியார் நிறுவனத்துக்கு (M/S Access International (Pvt)Ltd) சபை வழங்கியிருந்தது.
இந்தப் பொருட்களுக்கு வரியைச் செலுத்தாது களஞ்சியக் கிடங்கில் வைப்பதற்கு சுங்கத் திணைக்களம் அனுமதி வழங்கியிருந்ததுடன், இதற்காக 08 சுங்கப் பிரகடனங்களும் வழங்கப்பட்டுள்ளன.
அவற்றின் பெறுமதி 51 இலட்சத்து 39 ஆயிரத்து 621 அமெரிக்க டொலராக இருந்தபோதும், அவற்றை களஞ்சியத்திலிருந்து விடுவிக்கும்போது தேசிய ரீதியில் தயாரிக்கப்பட்ட பற்றுச்சீட்டில் மொத்தப் பெறுமதி 63 இலட்சத்து 50 ஆயிரத்து 364 அமெரிக்க டொலர்கள் எனப் போலியான தகவல்கள் குறிப்பிடப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, குறிப்பிட்ட தனியார் நிறுவனம் 12 இலட்சத்து 7 ஆயிரத்து 98 டொலர் இலாபத்தைப் பெறுவதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுத்தமை தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கு அப்பால், போலியான பற்றுச்சீட்டு தயாரித்தமை, போலியான தகவல்களை வழங்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி மோசடியாகப் பெறப்பட்டுள்ள நிலையில், இதனை விசாரணை செய்த சுங்கத் திணைக்களம் இது அக்சஸ் நிறுவனத்தின் தவறு இல்லையென விசாரணையை முடிவுக்குக் கொண்டுவந்தமை குறித்தும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு கவனம் செலுத்தியது.
இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்குப் புதிய குழுவொன்றை நியமித்திருப்பதாகவும், இந்த விசாரணை அறிக்கையை ஏப்ரல் 01ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க முடியும் என்றும் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.