இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதி வரையில் 22 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.
கட்டாரில் இருந்து நாடு திரும்பி நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 22 பேருக்கே இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 3071 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கொவிட் 19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ள 191 பேர் தொடர்ந்தும் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொவிட் 19 பரவல் காரணமாக கட்டார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியங்களில் சிக்கியிருந்த 640 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கட்டாரில் இருந்து 59 இலங்கையர்களும், குவைத்தில் இருந்து 293 இலங்கையர்களும் நாடு திரும்பியுள்ளனர்.
அவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவதாக குறிப்பிடப்படுகிறது.
அத்துடன் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 288 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் இலங்கையில் சீன முதலீட்டு திட்டங்களில் பணிபுரியும் 198 சீன பிரஜைகளுடன் நேற்று இரவு விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பிரவேசித்துள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் 2 ஆயிரத்து 20 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை 2 லட்சத்து 26 ஆயிரத்து 111 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் 35 ஆயிரத்து 142 பேர் இதுவரை தனிமைப்படுத்தல் நடவடிக்கையினை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
அத்துடன் இராணுவாத்தினரால் நிர்வகிக்கப்படும்; தனிமைப்படுத்தல் நிலையங்களில் இன்றைய தினம் 187 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கையினை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பவுள்ளனர்.