மேல்மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை- 3,409 பேர் கைது

மேல்மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை- 3,409 பேர் கைது

நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேல்மாகாணத்தில் காவல்துறையினர் மேற்கொள்ளப்பட்ட 3,324 விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 3,409 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று காலை அம்பலாங்கொடை பெரட் சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 49 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை 8.55 மணியளவில் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சம்பவத்தில் காயமடைந்த நபர் பலபிடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்தில் உள்ள CCTV கமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, ஹபராதுவ பிரதேசத்தில் 20 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 10 போதை மாத்திரைகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உந்துருளியில் பயணித்த குறித்த இருவரும் ஹபராதுவ காவல்துறையினரின் ஜீப் வண்டியின் பின்னால் மோதியுள்ளனர்.

பின்னர் காவல்துறை அதிகாரிகள் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது சந்தே நபர்களிடம் இருந்து குறித்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களை பின்னர் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்திய நிலையில் அவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்தியிருந்தமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.