ஜனாதிபதியிடம் ஃப்ரீ லோயர்ஸ் முன்வைத்துள்ள 22 பகிரங்க கேள்விகள்
திறைசேரி கொள்ளை வெளிப்படுத்தப்பட்டு இன்றுடன் (27) ஐந்து நாட்கள் கடந்துள்ள போதிலும், இது தொடர்பில் குறைந்தபட்சம் நீதவான் நீதிமன்றத்திற்கு கூட விடயங்கள் அறிக்கையிடப்படவில்லை என 'ஃப்ரீ லோயர்ஸ்' அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகளின் சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையக் கூட விசாரணையாளர்கள் இதுவரை முன்னெடுக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக, ஃப்ரீ லோயர்ஸ் அமைப்பு இந்தச் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அமைச்சரவையிடம் 22 பகிரங்கக் கேள்விகளை முன்வைத்துள்ளது.
ஜனாதிபதியும் அமைச்சரவையும் இந்த 22 கேள்விகளுக்கும் பகிரங்கமாக பதிலளிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
- மேற்கோள் -
திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் காணாமல் போயுள்ளதை அல்லது கொள்ளையடிக்கப்பட்டுள்ளதை ஜனாதிபதி ஏற்றுக்கொள்கிறாரா?
இச்சம்பவம் நடந்த திகதி குறித்து ஜனாதிபதி என்ற ரீதியில் உங்களுக்கு அறிக்கையிடப்பட்டதா?
2025 செப்டம்பர் 6 அல்லது அதற்கு நிகரான ஒரு நாளில், நீங்கள் அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் நிதி அமைச்சின் தரவுத் தொகுதியின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதை ஜனாதிபதி / நிதி அமைச்சர் என்ற ரீதியில் நீங்கள் அறிந்திருந்தீர்களா?
அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து திறைசேரி செயலாளரால் உங்களுக்கும் நிதி இராஜாங்க அமைச்சருக்கும் அறிவிக்கப்பட்டதா?
அவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தால், நீங்களும் நிதி இராஜாங்க அமைச்சரும் அது தொடர்பில் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
டிஜிட்டல் விவகாரங்கள், நிதி, திட்டமிடல் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகிய துறைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில், திறைசேரியில் நடந்த இந்தக் கொள்ளைக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
அப்படியானால், தேசிய பாதுகாப்பின் அடிப்படைப் பாடப்பரப்பிற்கு உட்பட்ட நான்கு துறைகள் தற்போது முறிவடைந்து, தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
திறைசேரி செயலாளரை நீங்கள் நியமித்ததை ஏற்றுக்கொள்கிறீர்களா?
நிதிச் செயலாளர், மக்கள் விடுதலை முன்னணி/ தேசிய மக்கள் சக்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
திறைசேரி, நிதி மற்றும் திட்டமிடல் தொடர்பாக அவருக்கு முன்னனுபவம் எதுவும் இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
அவர் தற்போது ஆரம்பகட்ட விசாரணை தொடர்பான நியமனங்கள் மற்றும் அறிக்கைகளை மாற்றி, இந்தக் கொள்ளையின் சாட்சியங்களை அழித்து வருவதாக உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதா?
நிதி அமைச்சின் செயலாளர் நியமிக்கப்பட்ட பின்னரே இந்தக் கொள்ளை நடந்ததென்பதையும், அதன் பின்னர் நிதிக்குற்றத்தின் போது பின்பற்ற வேண்டிய அடிப்படை நிர்வாக நடைமுறைகளைக் கூட செயலாளர் தவறியுள்ளார் என்பதையும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
இந்தக் கொள்ளை நடந்த திகதி மற்றும் இதில் திறைசேரியிலிருந்து சம்பந்தப்பட்ட நபர்கள் யார் என்பதை நீங்கள் அறிவீர்களா?
இது தொடர்பாக நீங்கள் நியமித்த திறைசேரி செயலாளர் உங்களுக்கு எப்போது அறிவித்தார்?
ஃப்ரீ லோயர்ஸ் அமைப்பு சபாநாயகருக்குத் தெரிவிப்பதற்கு முன்னர் இது குறித்து நீங்கள் அறிந்திருந்தால், அரசியலமைப்பின் 148 ஆவது பிரிவின் கீழ் இது பற்றி பாராளுமன்றத்திற்கோ அல்லது மக்களுக்கோ ஏன் அறிவிக்கவில்லை?
ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை அல்லது அதற்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் உரையாற்ற வருகை தரும் நீங்கள், இது குறித்த விடயங்களைப் பாராளுமன்றத்தில் இருந்து மறைத்தது ஒரு குற்றமென்று ஏற்றுக்கொள்கிறீர்களா?
இந்தக் கொள்ளை தொடர்பாக நீங்கள் நியமித்த திறைசேரி செயலாளர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலோ அல்லது பொலிஸிலோ 2026 ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் எமது வெளிப்படுத்தலுக்கு முன்னர் முறைப்பாடு செய்துள்ளாரா?
இந்தக் கணினித் திருட்டு தொடர்பாக, கணினி குற்றங்கள் தொடர்பான அவசர விசாரணை நிறுவனங்களிடம் எப்போது முறைப்பாடு செய்யப்பட்டது? யாரால் செய்யப்பட்டது?
அவ்வாறு செய்யப்படவில்லை என்றால், அது ஒரு பாரிய தவறு என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
இவ்வளவு முறைகேடுகள், தவறுகள், பொறுப்பற்ற தன்மை மற்றும் நேர்மையற்ற முறையில் செயற்பட்டுள்ள நிதிச் செயலாளர் மீது உங்களுக்கு இன்னும் நம்பிக்கை உள்ளதா?
அவர் அந்தப் பதவியில் இருக்கும் வரை நியாயமான விசாரணை நடத்த முடியும் என்று ஜனாதிபதி/ நிதி அமைச்சர் என்ற ரீதியில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?
ஹர்ஷன சூரியப்பெரும என்பவரை உடனடியாக நிதி அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி, முறையான விசாரணையை முன்னெடுப்பதற்கான வாய்ப்பை நீங்கள் ஏற்படுத்திக் கொடுப்பீர்களா?
- மேற்கோள் நிறைவு -