பொலிஸ் அதிகாரிகளுக்கான தனி சம்பள கட்டமைப்புக்கு நடவடிக்கை

பொலிஸ் அதிகாரிகளுக்கான தனி சம்பள கட்டமைப்புக்கு நடவடிக்கை

பொலிஸ் சேவைக்கு தனி சம்பள கட்டமைப்பை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இது குறித்து ஜனாதிபதியிடம் தெரிவித்து 2026 வரவு செலவுத் திட்டத்திற்கான பொருத்தமான திட்டங்களை சமர்ப்பிப்பதாக அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவில் அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்தார்.

பொலிஸ் அதிகாரிகளுக்கான தனி சம்பள கட்டமைப்புக்கு நடவடிக்கை | Action Separate Salary Structure Police Officers

பொலிஸ் சேவையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தற்போது பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அவர்களின் செயல்திறனை அதிகரிக்க தேவையான பயிற்சித் திட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கும், சில சட்டவிரோத செயல்கள் தொடர்பாக நியாயமான விசாரணைகள் நடத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் கவனம் செலுத்தப்பட்டது.

பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் தலைவர் அமைச்சர் ஆனந்த விஜேபால, இவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள், சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்துதல், சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் துறையினருக்குத் தகவல் வழங்குபவர்களின் அடையாளங்களை வெளியிடாமல் இருப்பது போன்ற பிரச்சினைகள் குறித்து மேலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.