குறுந்தகவல் மூலம் கொரோனா நோயாளர்களை வகைப்படுத்தி சிகிச்சையளிக்கும் வேலைத்திட்டம் தென் மாகாணத்திலும்
மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட, கொவிட் நோயாளர்களை நோயின் தன்மைக்கு ஏற்ப வகைப்படுத்தி தேவைப்பாட்டின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுப்பதற்கான 1904 குறுந்தகவல் சேவை வேலைத்திட்டமானது இன்று (02) முதல் தென் மாகாணத்திலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளர்களின் நோய் தன்மைக்கு ஏற்ப அவர்களை வகைப்படுத்தி சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புதல் மற்றும் வீடுகளில் வைத்து முகாமை செய்தல் ஆகியவற்றுக்காக கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தினால் மேல் மாகாணத்தில் கடந்த ஆகஸ்ட் 19 ஆம்திகதி முதல் இந்த குறுந்தகவல் சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய நோயாளிகள் கீழ்வரும் தகவல்களை உள்ளீடு செய்து 1904 என்ற இலக்கத்துக்கு குறுந்தகவல் அனுப்பி வைக்க முடியும்.
கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சுவாசக் கோளாறுகளை கொண்டுள்ள நோயாளர்கள் A எனவும், காய்ச்சல் கொண்டுள்ள நோயாளர்கள் B எனவும், எவ்வித நோய் அறிகுறிகளும் கொண்டிராத நபர்கள் C எனவும் குறிப்பிட்டு (இடைவெளி) வயது (இடைவெளி) தேசிய அடையாள அட்டை எண் (இடைவெளி) முகவரி என்பவற்றை உள்ளீடு செய்து மேற்கண்ட இலக்கத்துக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குறுந்தகவல் ஊடாக கிடைக்கப்பெறும் தகவல்களுக்கு அமைய கொவிட் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம், நோயாளர்களை சிகிச்சை மையங்களுக்கு அனுப்புவது தொடர்பில் மருத்துவர்களுக்கு அறிவிக்கும்.