ஆங் சான் சூகி உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து மியன்மார் இராணுவக் கட்டுப்பாட்டில்...!

ஆங் சான் சூகி உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து மியன்மார் இராணுவக் கட்டுப்பாட்டில்...!

தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் பலர் கைது செய்யப்பட்டதை அடுத்து மியன்மாரை இராணுவம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

ஒரு வருட காலத்திற்கு அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி இவ்வாறு இராணுவம் தமது அதிகாரத்தின் கீழ் நாட்டை கொண்டு வந்துள்ளதாக மியன்மார் இராணுவ தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மியன்மாரின் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பலரும் அந்த நாட்டு இராணுவத்தினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு, கடந்த நொவம்பர் மாதம் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தேசிய லீக் ஜனநாயக கட்சி கணிசமான ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றது.

எனினும், அந்த தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாக மியன்மார் இராணுவம் தொடர்ந்தும் குற்றம் சாட்டி வந்தது.

இந்த நிலையில், இன்றைய தினம் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவிருந்த நிலையில், ஆளும் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி இராணுவத்தினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.