
வவுனியாவில் கத்திக்குத்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வைத்தியசாலையில்..
வவுனியா - கற்குளம் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய ஆண் மற்றும் 17 வயதுடைய பெண் ஆகியோர் குடும்பமாக வாழ்ந்துவரும் நிலையில், பெண்ணின் தாயார் இருவரையும் பிரிக்கும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்திருக்கிறார்.
ஒருவழியாக குறித்த பெண்ணை தாய் தன்வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிற நிலையில், இன்று மதியம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்ற நபர் பெண்ணின் தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து அங்கு இருந்த கத்தி ஒன்றை எடுத்து பெண்ணின் தாயைத் தாக்க முற்படுகையில், குறித்த பெண் இடைமறித்ததால் அந்த பெண்ணையும் தாக்கி பெண்ணின் தாயையும் வெட்டியிருக்கிறார்.
இதே வேளை இதனைத் தடுக்க வந்த பெண்ணின் வயதான பாட்டி ஒருவரையும் வெட்டியிருக்கிறார்.
இதன் பின், குறித்த பெண்ணை மட்டும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு அவர் வீடு திரும்பிய நிலையில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.