அடுத்த வார நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் வெளியான தகவல்...!
அடுத்த வார நாடாளுமன்ற அமர்வினை எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய சுகாதார சட்டவிதிகளுக்கு அமைய எதிர்வரும் 3 ஆம் திகதி முற்பகல் 10 மணி முதல் நண்பகல் 12 வரை நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.
அன்றையதினம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், அன்றையதினம் வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் ஒதுக்கப்படாது.
அதேநேரம், நாடாளுமன்றம் கூடும் தினத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அழைக்கப்பட்ட அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தவிர வேறு எவரும் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.
இதற்கமைய, ஊடகப் பிரதிநிதிகளும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை அறிக்கையிடுவதற்கு நாடாளுமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2020 நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கு நிதியமைச்சரினால் முன்வைக்கப்பட்ட ஓதுக்கீட்டுச் சட்டமூலத்தை எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி இரண்டாம் மற்றும் மூன்றாம் வாசிப்புக்கு உட்படுத்தி நிறைவேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.