
வடக்கு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவசர கடிதம்
யாழ்.மாநகரப் பகுதிக்குள் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை காரணமாக பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக யாழ். வைத்திய அதிகாரி வடமாகாண ஆளுநருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த பகுதிக்குள் 08 பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் 04 பேர் மட்டுமே சேவையில் உள்ளனர். இதுதொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
யாழ். மாவட்டத்தில் மொத்தம் 96 பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் பணியாற்ற வேண்டும். அந்த நிலையில் மாவட்டம் முழுவதுமாக 89 பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களே உள்ளனர்.
07 பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் காணப்படும் நிலையில் 04 வெற்றிடங்களானது யாழ் மாநகரப் பகுதியில் காணப்படுகின்றது.
6 ஆயிரம் தொடக்கம் 7 ஆயிரம் பேருக்கு ஒரு சுகாதார உத்தியோகத்தர் எனும் அடிப்படையில் யாழ். மாநகர எல்லைக்குள் 80 ஆயிரம் பேருக்கு 04 பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களே பணியாற்றுகின்றனர்.
இந்த நிலமைகள் அனைத்தையும் நன்கு அறிந்துள்ள மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் யாழ். குடாநாட்டிற்கு கிடைத்த 13 பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களில் ஒருவரைக்கூட யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு வழங்காது ஏனைய இடங்களிற்கு வழங்கியுள்ளனர்.
இவ்விடயங்களை கருத்தில் கொண்டு நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஆவன செய்யுமாறு அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.