விஷம் வைக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் புடின்: அலெக்ஸி நவல்னி சந்தேகம்!

விஷம் வைக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் புடின்: அலெக்ஸி நவல்னி சந்தேகம்!

தனக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் இருந்தாக கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னி சந்தேகிக்கின்றார்.

இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படவிருந்த ஜேர்மனி பத்திரிக்கையொன்றுக்கு அளித்த நேர்காணலின் போதே இதனை அவர் கூறியுள்ளார்.

‘இந்த குற்றத்தின் பின்னணியில் புடின் இருப்பதாக நான் கூறுகிறேன். என்ன நடந்தது என்பதற்கான வேறு ஆதாரங்கள் என்னிடம் இல்லை’ என்று நவல்னி டெர் ஸ்பீகல் பத்திரிக்கையிடம் கூறினார்.

இந்த சம்பவத்தில் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ள கிரெம்ளினிடம் மேற்கு நாடுகள் விளக்கம் கோரியுள்ளன. மேலும் இந்த குற்றத்திற்கான ஆதாரங்கள் எதுவும் இன்னமும் திரட்டப்படவில்லை.

நவல்னி டெர் ஸ்பீகல் பத்திரிக்கையிடம் தான் ரஷ்யாவுக்குத் திரும்புவதாகவும், தனது பணி இப்போது அச்சமின்றி இருப்பதுதான். தனக்கு எந்த பயமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

நவல்னியை ஜேர்மனிக்கு அழைத்து வர உதவிய ஒரு அரசியல் ஆர்வலர், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு உடற்தகுதி திரும்புவதற்கு குறைந்தபட்சம் இன்னும் ஒரு மாத காலம் ஆகும் என்று கூறினார். மேலும் அவர் ரஷ்யாவுக்குத் திரும்பி அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளார் என்பது உறுதி எனவும் குறிப்பிட்டார்.

‘நோவிசோக்’ என்ற நச்சு தாக்குதலுக்கு உள்ளனான அலெக்ஸி நவால்னி, 32 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு கடந்த வாரம் பெர்லின்- சரைட் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.