சர்வதேச சிறுவர் தினம் இன்று..!

சர்வதேச சிறுவர் தினம் இன்று..!

'எமது தேசத்தை நாமே கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப்பொருளில், சர்வதேச சிறுவர் தினத்தை இலங்கை இன்று கொண்டாடுகின்றது.

இதன் தேசிய நிகழ்வு, நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

சர்வதேச முதியோர் தினமும் இன்று அமைந்துள்ளது.

சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள செய்தியில், சிறுவர்களை அறிவு ரீதியாக வளப்படுத்தி திறன் விருத்திக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பது முழு சமூகத்தினதும் பொறுப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்களின் உள, உடல், ஆரோக்கியத்தை வளப்படுத்துவதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை போன்றே அவர்கள் நற்பண்புள்ளவர்களாக வளர்வதற்கான சூழலை உறுதிப்படுத்துவதும் அவசியமாகும்.

ஒரு சிறந்த தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு சிறுவர் தலைமுறையை சிறந்த ஒழுக்கப் பெறுமானங்களுடன் தொழிநுட்ப திறன்கள் மற்றும் மொழி அறிவைப் பெற்றவர்களாக வளப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள செய்தியில், குழந்தைகளே ஒவ்வொரு நாட்டினதும் எதிர்காலம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர்களை ஆரோக்கியமான செயற்திறன் மிக்க குழந்தைகளாக மாற்றுவதற்கு, குழந்தைகள் முறையாக வழிநடத்தப்படுகின்றார்கள் என்பதை உறுதிசெய்வது எமது பொறுப்பாகும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அனைத்து குழந்தைகளும் வீட்டிலும் பாடசாலையிலும் பாதுகாப்பாக இருப்பதையும், சரியான ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்துக்கான அணுகல் மற்றும் இலவச கல்விக்கான உரிமையை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

குழந்தைகளுக்கான பாதுகாப்பான மற்றும் வளமான தேசத்தை உருவாக்குவதற்கு இலங்கையின் அனைத்து சமூகங்களும் பகிர்ந்து கொள்ளும் பரஸ்பர கலாசாரம், சமூக மற்றும் தார்மீக விழுமியங்கள் என்பனவும் கைக்கொடுக்கும் என தான் நம்புவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறுவர்கள் தொடர்பான சட்டங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் குமாரி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டில், இதுவரையில் நடைமுறையில் உள்ள சட்டங்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சிறுவர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் குமாரி ஜயசேகர தெரிவித்துள்ளார்.