மடு வீதியில் போலித் தேன் வியாபாரத்தில் ஈடுபட்ட சிறுவர்களுக்கு ஏற்பட்ட நிலை

மடு வீதியில் போலித் தேன் வியாபாரத்தில் ஈடுபட்ட சிறுவர்களுக்கு ஏற்பட்ட நிலை

வவுனியா பகுதியிலிருந்து போலியான தேன் உற்பத்தியை மேற்கொண்டு மன்னார் பகுதியில் தேன் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சிறுவர்களை மடு பிரதேச பொது சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்கள் கைது செய்து போலித் தேன்களை அழித்தொழித்ததுள்ளனர்.

அத்துடன் பெற்றோர்களுக்கு முன் இவர்களை எச்சரித்து விடுவித்துள்ளனர். இச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மடு றோட்டிலிருந்து மடு ஆலயம் செல்லும் வழியிலேயே இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

மன்னார் மடு றோட்டிலிருந்து மடு தேவாலாயத்துக்கு செல்லும் பாதை எங்கும் சிறுவர்களை பயன்படுத்தி போலியான தேன் போத்தல் வியாபாரங்கள் இடம்பெற்று வருவதையிட்டு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இதை முன்னிட்டு மடு பிரதேச பொது சௌக்கிய சுகாதார சேவைகள் அதிகாரி ஐ.பி.றெக்சன் றொட்ரிக்கோ மற்றும் சக பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் உதவியுடன் இணைந்து சிறுவர்களை கைது செய்ததுடன் எச்சரித்து விடுவித்துள்ளனர்.

இவர்கள் வவுனியா மெனிக்பாம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கோதுமை மா, சிற்றிக் அசிட், சீனி மற்றும் தேன் இவற்றைக் கலந்து குறித்த பதத்தில் பதனிட்டு போத்தல்களில் அடைக்கப்பட்டே இவ் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களது வயதினை கவனத்துக்கு எடுத்து மனிதாபிமான அடிப்படையில் வழக்கு தொடராது எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதுடன் போலியான அனைத்து தேனும் அழிக்கப்பட்டுள்ளன.