தேங்காயின் சுற்றளவை அளக்க புதிய கருவி அறிமுகம்

தேங்காயின் சுற்றளவை அளக்க புதிய கருவி அறிமுகம்

விற்பனையை இலகுபடுத்தும் வகையில் தேங்காயின் சுற்றளவை அளப்பதற்கு நுகர்வோர் அதிகார சபையினால் புதிய கருவியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகார சபை தேங்காய் ஒன்றை விற்பனை செய்யக் கூடிய அதி உயர் சில்லறை விலையை கடந்த 25 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.

தேங்காய் ஒன்றின் சுற்றளவை வைத்து விலை தீர்மானிக்கப்படும். 13 அங்குலத்திலும் கூடிய தேங்காய் ஒன்றின் விலை 70 ரூபாவாகும் 12 தொடக்கம் 13 அங்குல சுற்றளவை கொண்ட தேங்காய் ஒன்றின் விலை 65 ரூபாவாகும். 12 அங்குலத்திலும் குறைந்த சுற்றளவை கொண்ட தேங்காய் 60 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும்.

தேங்காயின் சுற்றளவை அளப்பதற்கு கருவியொன்றை அறிமுகம் செய்ய நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்தது. இது குறித்த ஊடக சந்திப்பும் இடம்பெற்றது. நுகர்வோர் அதிகார சபையின் முற்றுகை பிரிவு அதிகாரிகள் இன்று நாரேஹன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம், தெமட்டகொட பொதுச் சந்தை ஆகியவற்றிற்கு விஜயம் செய்தனர். அங்கு தேங்காயின் விலை மற்றும் அளவிடும் கருவிகள் தொடர்பாக வர்த்தகர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

இதேநேரம் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு இன்று நாரேஹன்பிட்டி வாராந்த சந்தையில் தேங்காய் விலை தொடர்பாக கண்காணித்தது.