இந்திய பிரதமரின் 13 ஆவது திருத்த நிலைப்பாடு தொடர்பில் நம்பிக்கை வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்!

இந்திய பிரதமரின் 13 ஆவது திருத்த நிலைப்பாடு தொடர்பில் நம்பிக்கை வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 13 ஆவது திருத்த சட்டம் தொடர்பான நிலைப்பாட்டை வரவேற்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இந்த நிலைப்பாடு சிறுபான்மை மக்களுக்கு இலங்கையில் இருக்கின்ற உரிமைகளை பாதுகாத்து கொள்வதற்கு உறுதுணையாக இருக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு 13 வது திருத்த சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கண்ணியம் ஆகியற்றை யதார்த்தமாக்கும் வகையில் அரசியலமைப்பின் சரத்துக்களை அமுல்படுத்துவதன் ஊடாக நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நரேந்திர மோடி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தியப் பிரதமரின் இந்த கருத்துக் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள வேலுசாமி இராதகிருஷ்ணன், நரேந்திர மோடி ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு மீண்டும் அழுத்தம் கொடுத்திருப்பதை சிறுபான்மை கட்சி என்ற வகையில் தாம் வரவேற்பதாக கூறியுள்ளார்.

விசேடமாக இலங்கையில் இருக்கின்ற சிறுபான்மை மக்களுடைய உரிமைகளையும் அவர்களுடைய அபிவிருத்தியையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தம் ஊடாக சிறுபான்மை மக்களுடைய பல்வேறு விடயங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக சிறுபான்மை மக்களின் கல்வி சுகாதாரம் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியன கடந்த 30 வருடங்களுக்குள் குறிப்பிடக்கூடிய அளவில் அபிவிருத்தி அடைந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூன்று முறை மத்திய மாகாண கல்வி அமைச்சராக இருந்தவன் என்ற வகையில் மாகாண சபை ஊடாக கல்விக்கு பாரிய அபிவிருத்தியை செய்யக்கூடிய ஒரு நிலைமை காணப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

அதே போல வடக்கு கிழக்கிலும் இவ்வாறான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கு சிறந்த உதாரணமாக நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறையில் இருந்தவாறே பிள்ளையான் வெற்றி பெற்றுள்ளார் எனவும் அதற்கு காரணம் அவர் மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் மேற்கொண்ட அபிவிருத்திகளே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே 13 ஆவது திருத்த சட்டத்தை மேலும் வலுப்படுத்தி சிறுபான்மை மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாக இருந்தால் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு சிறுபான்மை மக்களுடைய பங்களிப்பையும் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளை வழங்கி முன்னேறிய நாடுகளுக்கு உதாரணமாக மலேஷியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் காணப்படுவதாகவும் இராதகிருஷ்ணன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.