உலகளவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 மில்லியனைக் கடந்தது

உலகளவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 மில்லியனைக் கடந்தது

கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 மில்லியனைக் கடந்துள்ளது. அதற்கமைய கொரோனா வைரஸிலிருந்த மீண்டவர்களின் எண்ணிக்கை 4,035,791ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரையில், 78 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த கொடிய கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 432,200 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது.

அதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,035,791ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட 3,392,761 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றர்.

இதேவேளை, மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றால் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்ட நாடாக தொடர்ந்தும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை வைரஸ் தொற்றினால் 2,142,224 இற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 117,527 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேஸில் உள்ளது. பிரேஸிலில் 850,796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, 42,791 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர். மேலும் ரஷ்யா, இந்தியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் தரவரிசையில் முறையே 3,4,5ஆம் இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.