20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக இதுவரையில் 12 மனுக்கள் தாக்கல்!

20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக இதுவரையில் 12 மனுக்கள் தாக்கல்!

அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக இதுவரையில் 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் இன்று (வியாழக்கிழமை) உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார் என்பதுடன், 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில சரத்துக்களின் ஊடாக இந்நாட்டு அரசியலமைப்பு கடுமையாக மீறப்படுவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதன் காரணமாக குறித்த சரத்துக்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரம் போதாது எனவும் அது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் அந்த மனுவில் கோரியுள்ளார்.

அதற்கமைய குறித்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு அவர் அந்த மனுவில் கோரியுள்ளார்.

இதேநேரம், முன்னாள் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோனின் மனுவைத் தவிர்த்து, யாழ்ப்பாணத்திலிருந்து எஸ்.சி.சி.இளங்கோவன் மற்றும் நாட்டின் இரண்டு குடிமகன்கள், இலங்கை மனித உரிமை ஆர்வளர் ஸ்ரீமி அப்துல் சனுன் ஆகியோரும் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

அத்துடன், இலங்கை ட்ரான்ஸ்பரன்ஸி இன்ரனெஷனல் அமைப்பும் இன்று உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

இதேவேளை, 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை ஆட்சேபனைக்கு உட்படுத்தி சட்டத்தரணி இந்திக கால்லகே நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் விசேட மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் மனுத்தாக்கல் செய்தார்.

இதேநேரம், மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் சார்பாக பாக்கியசோதி சரவணமுத்து, சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு, அனில் காரியவசம் ஆகியோரும் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக விசேட மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக மொத்தம் 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் கடந்த 22ஆம் திகதி நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.