ஸ்ரீலங்காவின் பல பகுதிகளில் பொதுத் தேர்தலுக்கான ஒத்திகை வெற்றிகரமாக நிறைவு

ஸ்ரீலங்காவின் பல பகுதிகளில் பொதுத் தேர்தலுக்கான ஒத்திகை வெற்றிகரமாக நிறைவு

எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட மாவட்டங்களில் இன்று பொதுத் தேர்தலுக்கான ஒத்திகை நடாத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவில் ஒகஸ்ட் 05 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கொரோனா அச்சம் காரணமாக விதிக்கப்பட்டுள்ள சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாட்டின் பல பகுதிகளிலும் தேர்தல் ஒத்திகைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்றைய தினம் மொனராகல, பொலனறுவை, புத்தளம், மாத்தளை, நீர்கொழும்பு, கொழும்பு வடக்கு ஆகிய பகுதிகளில் தேர்தல் ஒத்திகை நடத்தப்பட்டது.

கம்பஹா மாவட்டத்திற்கான தேர்தல் ஒத்திகை நீர்கொழும்பு கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள புனித செபஸ்ரியார் கல்லூரியில் இன்று காலை ஒன்பது மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது.

200 பேர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத், நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், தேர்தல் ஆணைக் குழுவின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தேர்தல் வாக்களிப்பு ஒத்தகை நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்து தேர்தல் நடைபெறுவதை பார்வையிட்டு அதிகரிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

இதேவேளை தெனியாய அனின்கந்தை தமிழ் வித்தியாலயத்திலும் பரீட்சார்த்த வாக்களிப்பு இடம்பெற்றது.

இதன் போது சுமார் 225 பேர் வாக்களித்ததுடன் உதவி தேர்தல் ஆணையாளர் ரசிக பீரிஸ் ,காலி மற்றும் மாத்தறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்களும் ,மாத்தறை மாவட்ட பொலிஸ் அதிகாரிகளும் சுகாதார பரிசோதகர்களும் கொட்டப்பொல பிரதேச செயலகத்தின் செயலாளர்களும் அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.

வாக்களிப்பின் போது சமூக இடைவெளிகள் பேணப்பட்டதோடு அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.