எமது வேட்பாளர்கள் எவரும் பணம் படைத்தவர்கள் இல்லை- மக்களிடம் நிதியுதவி கோரும் சி.வி.

எமது வேட்பாளர்கள் எவரும் பணம் படைத்தவர்கள் இல்லை- மக்களிடம் நிதியுதவி கோரும் சி.வி.

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அடக்குமுறைகள், இன அழிப்பு, காட்டிக்கொடுப்புக்கள், ஏமாற்றுக்கள், குழிபறிப்புக்கள் ஆகியவற்றுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து தமிழ் தேசிய அரசியலை வெற்றிபெறச் செய்யும் தனது அரசியல் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை நல்குமாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மிகுந்த நிதி நெருக்கடியின் மத்தியில் அநாவசியமான செலவுகளைத் தவிர்த்து எதிர்வரும் தேர்தலை முற்றுமுழுதாக மக்களை நம்பி எதிர்கொள்வதாக தெரிவித்துள்ள அவர், சில அவசியமான செலவுகளை செய்வதற்கான நிதி உதவிகளை முடிந்தளவு செய்துதவுமாறு நிலத்திலும் புலத்திலும் உள்ள மக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்கள் அளிக்கும் எந்தவொரு சத பணமும் அநாவசியமான முறையில் செலவுசெய்யப்படாது என்றும் ஒவ்வொரு சதத்துக்கும் கணக்கு காட்டப்படும் என்றும் குறிப்பிட்டுள்ள விக்னேஸ்வரன் தனது வங்கிக் கணக்குகளைத் தெரியப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எம் நிலத்திலும் புலத்திலும் வாழ்கின்ற எனது அன்புக்குரிய மக்கள் எனது அரசியல் பிரவேசத்தை நன்கறிவார்கள். வட மாகாணத்தின் முதல்வராக பதவியேற்ற பின்னர் மக்களுடன் மக்களாக வாழ்ந்தபோது எனக்குள் ஏற்பட்ட உணர்வுத் தாக்கங்கள், புரிந்துகொண்ட விடயங்கள் இந்த மண்ணில் அரசியல் பயணத்தில் நான் செய்ய வேண்டிய பணிகளையும் பொறுப்பையும் எனக்கு உணர்த்தின.

இதனால் மக்களுக்கு உண்மையான, நேர்மையான அரசியலை நடைமுறையில் கைக்கொண்டபோது என்னை அரசியலுக்கு அழைத்து வந்தவர்களே எனக்கு விரோதிகளாக மாறிக்கொண்டனர். அவர்களின் சொற்களைக் கேட்டு ஒரு கிளிப்பிள்ளையாக இருந்து ‘முதல்வர் பதவியை’ காப்பதை விடவும் எனது தேர்தல் வாக்குறுதிகள் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கு துரோகம் செய்வதைவிடவும் மக்களின் மனக் கிடக்கைகளை உலகிற்கு உணர்த்த வேண்டும் என்பதும் எத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும் எமது மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப் படுகொலையை உலகத்துக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதும் எனது அவாவாகியது.

இதனால் பல்வேறு இன்னல்களையும், நெருக்கடிகளையும், குழிபறிப்புக்களையும் சந்தித்த நிலையிலேயே துணிச்சலான பல நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியை ஆரம்பித்து எனது புதிய அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருகின்றேன்.

சவால்கள் அதிகமானாலும் நாம் நம்பிக்கையுடன் இந்தப் போராட்டத்துக்குள் குதித்திருக்கின்றோம். அநாவசியமான செலவுகளைத் தவிர்த்து மிகவும் சிக்கனமான முறையில் நாம் இந்தத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றபோதிலும் சில அவசியமான செலவுகளை நாம் செய்தேயாக வேண்டியுள்ளது.

எமது கட்சி சார்பில் போட்டியிடுகின்றவர்கள் எவரும் பணம் படைத்தவர்கள் அல்ல. பணத்தை உழைக்கவும் அவர்கள் அரசியலைத் தேர்வு செய்யவில்லை. அவர்களுக்கு உங்களின் நிதி உதவி பேருதவியாக அமையும்.

அரசியலுக்கு பணம் சம்பாதிக்கலாம் என்ற இன்றைய தமிழ் அரசியல் தலைவர்கள் மத்தியில் காணப்படும் ‘உழைப்பு கலாசாரத்தை’ மாற்ற வேண்டும். அதனை முதல் வேலையாக எமது கூட்டணி செய்யும்.

அத்துடன் உறுப்பினர்களுக்கு கிடைக்கும் பண விபரங்கள் மற்றும் செலவீனங்கள் அதிலிருந்து மக்களுக்கு கொடுக்கப்படும் நிதி விபரங்கள் யாவும் ஊடகங்களில் பகிரங்கப்படுத்தப்படும். எமது கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளவர்கள் தமிழ் தேசியத்தின்பால் உறுதியான உணர்வும் கொள்கைப் பற்றும் அறிவுத் திறனும் கொண்டவர்கள்.

அவர்கள் இந்தத் தேர்தலில் வெற்றிபெற அவர்களுக்கான அடிப்படைத் தேவைப்பாடுகளுக்கான நிதி உதவியினை நிலத்தில் உள்ள செல்வந்தவர்களிடமும் புலத்தில் உள்ள கொடையாளர்களிடமும் விநயமாகக் கோரி நிற்கின்றேன். மக்களுக்காகவும் மக்களின் அரசியலுக்காகவுமே அதனை உபயோகிப்போம்.

கீழே இரண்டு வங்கிக் கணக்குகள் இருக்கின்றன. முதலாவது கொள்கை ரீதியாக பல கட்சிகள் இணைந்து நாம் உருவாக்கிய தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கு உரியது. கட்சிகளின் தலைவர்கள் இணைந்து ஒரு பொதுக்கணக்கை உருவாக்கி இருக்கின்றோம். இரண்டாவது எனது கட்சியான தமிழ் மக்கள் கூட்டணிக்கு உரியது. நானும் பேராசிரியர் சிவநாதனும் இணைந்து ஒரு கூட்டுக் கணக்கை உருவாக்கி இருக்கின்றோம். விருப்பமான வங்கிக் கணக்குக்கு நீங்கள் உங்கள் நன்கொடைகளைச் செலுத்தலாம்.

எமக்கு வழங்கப்படும் உதவிகள் அனைத்தும் இவற்றுள் ஏதாவது ஒரு வங்கிக் கணக்கு ஊடாகவே அனுப்பப்பட வேண்டும் என்பதுடன் அதற்கான பற்றுச்சீட்டு மற்றும் தங்கள் பெயர் விபரங்களை cvwoffice18@gmail.com, cvwofficenallur@gmail.com, cv.wigneswaran@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வினயமாக வேண்டி நிற்கின்றேன்.

1. Account holder name and full address: Joint Account for Kootani:
Mr.C.V.Wigneswaran, Mr.K.Premachandran, Mrs.Ananthy Sasitharan, No:
232, Temple Road, Nallur, Jaffna
Account number: 85827313
Branch number and full address: Branch No:358, Address: Bank of Ceylon,
Nallur Branch, Jaffna, Sri Lanka
Institution number: 7010
Swift Code / BIC / IBAN code: BCEYLKLX

2. Account holder name and full address: C.V.Wigneswaran &
V.P.Sivanathan No: 232, Temple Road, Nallur, Jaffna
Account number: 0085686756
Branch number and full address: Branch No:358, Address: Bank of Ceylon,
Nallur Branch, Jaffna, Sri Lanka
Institution number: 7010
Swift Code / BIC / IBAN code: BCEYLKLX

பணம் அனுப்பும் முறைமைகளில் சிரமங்கள் எதுவும் இருந்தால் எனது அலுவலகத்துடன் தயவுசெய்து தொடர்புகொள்ளவும். (தொடர்பு இலக்கம்: 021 221 4295) என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.