ஹொங்கொங் போராட்டத்தின் முதல் ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் மீண்டுமொரு போராட்டம்!

ஹொங்கொங் போராட்டத்தின் முதல் ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் மீண்டுமொரு போராட்டம்!

ஜனநாயக சார்பு எதிர்ப்பு இயக்கத்தில் ஒரு முக்கிய தருணத்தின் முதல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஹொங்கொங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்கி போராடியுள்ளனர்.

ஹொங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் திகதி, நிதி மையத்தில் பெரிய அணிவகுப்பு நடத்தப்பட்டது.

இதன் ஓராண்டு நிறைவுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, மீண்டுமொரு போராட்டத்தினை ஹொங்கொங் மக்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்தனர். இதன்போது, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், பதாகைகளை ஏந்தியபடி, அரசுக்கு எதிராக, கோஷங்களை எழுப்பினர்.

போராட்டம் ஆரம்பமான சிறிது நேரத்துக்கு பிறகு, போராட்டக்காரர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இதன்போது கலகப் பிரிவு பொலிஸார், எதிர்ப்பாளர்களிடையே கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

முன்னதாக, ஹொங்கொங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு ஜூன் மாதமளவில் தொடங்கிய போராட்டங்கள், அந்த சட்டமூலம் காலாவதியான பிறகும் தொடர்ந்து தீவிரமடைந்து வந்தன.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் காரணமாக குறித்தப் போராட்டங்கள் அடங்கியிருந்தன. இந்த நிலையில், அண்மையில் சீன நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து அங்கு மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது.

70 லட்சம் மக்கள் தொகையை கொண்ட ஹொங்கொங் பல்லாண்டு காலமாக பிரித்தானியாவின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது.m1997ஆம் ஆண்டு ஹொங்கொங்கை, பிரித்தானியா சீனாவிடம் ஒப்படைத்தது. அப்போது தொடங்கி தற்போது வரை ஹொங்கொங், சீனாவின் காட்டுப்பாட்டில்தான் உள்ளது.