நெருக்கடியான கட்டத்தில் அமெரிக்கா! ட்ரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவு

நெருக்கடியான கட்டத்தில் அமெரிக்கா! ட்ரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவு

நாடு முழுதும் பொலிஸார் தற்போது நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். 2 வாரங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை யாரும் மறக்க முடியாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜோர்ஜ் பிளாய்ட் நிறவெறி காரணத்தினால் பொலிஸ் காவலில் கொல்லப்பட அமெரிக்காவில் கொரோன காலத்தையும் சமூக இடைவெளியையும் மறந்து பலரும் போராட்டத்தில் குதித்தனர், போராட்டம் பெரும் பகுதி அமைதிவழியில் நடைபெற்றாலும் சில இடங்களில் வன்முறை, கலவரம் வெடித்தது.

பொலிஸார் பல இடங்களில் தாக்கப்பட்டனர். இதனையடுத்து பொலிஸ் துறையில் சீர்த்திருத்தம் செய்ய நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்கு எதிரான போராட்டங்களில் பல மாகாணங்களில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய்விட்டது. பொலிஸார்களுக்கு ஆங்காங்கே அடி உதை விழுந்து கொண்டிருக்கிறது.

சூறையாடல் தொடர்ந்தால் துப்பாக்கிச் சூடு பின் தொடரும் என்று ட்ரம்ப் கூறியதற்கு அங்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின, உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரே ‘ஏதாவது ஆக்கபூர்வமாகச் செய்ய முடிந்தால் செய்யவும் இல்லையெனில் வாயை மூடிக்கொண்டு போகவும்’ என்று ட்ரம்பை விளாசியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் மாகாண கவர்னர்களும் ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் கூறியதாவது:

நாடு முழுதும் பொலிஸார் தற்போது நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். 2 வாரங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை யாரும் மறக்க முடியாது. பல இடங்களில் கலவரங்களால் சிலர் உயிரிழந்துள்ளனர். இது போன்ற கொலை சம்பவங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

கலவரங்களில் பெரும்பாலும் பொலிஸார் உயிரிழந்துள்ளனர். இதை எப்படி வேடிக்கை பார்க்க முடியும்? இனப் பாகுபாடு போன்ற விஷயங்களைப் பேசித் தீர்க்கலாம். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரமிது.

நெருக்கடியான அரசியல் சூழலில் சிக்கித் தவிக்கும் பொலிஸாரை ஊக்குவிக்கும் வகையில் பொலிஸ் துறையில் சீர்த்திருத்தம் மேற்கொள்வதற்காக நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் இறுதி செய்யப்படவுள்ளன.

நெருக்கடியான நேரங்களில் பொலிஸ் துறை எப்படி செயல்பட வேண்டும் என்பதை தொழில்ரீதியான விதிமுறைகளுடன் வகுத்தளிக்கப்பட வேண்டிய நேரம் இது. அமெரிக்காவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் வன்முறை இல்லாத சூழ்நிலையில் வளர வேண்டும் என்பதே நம் நிலைப்பாடு. அமெரிக்கா மிக உயர்ந்த நாடு.

இங்கு அமைதியான சூழல் நிலவ அனைவரும் உதவ வேண்டும். இங்குள்ள அரசியல்வாதிகள் சுயநலத்துக்காக தவறான குற்றச்சாட்டுகளை கூறி அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்துகின்றனர் என்றார்.