இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினம் இன்று! – தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் பிரதமர்

இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினம் இன்று! – தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் பிரதமர்

இந்திய சுதந்திர தின விழா இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விழா கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் சுதந்திர தின விழா தொடக்கமாக டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, செங்கோட்டையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

அதன் பின்னர் 74வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் ஏழாவது முறையாக பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், வெளிநாட்டுத் தூதர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மொத்தம் 4 ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பு இல்லாதவர்களுக்கு விழா அரங்கில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சுதந்தின தின விழாவை முன்னிட்டு டெல்லியைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமானங்கள் பறக்கவும் தடைவிதிக்கப்பட்டு போக்குவரத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. செங்கோட்டையில் கமாண்டோப் படை உள்ளிட்ட பல அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைத்துள்ளனர்.

மெட்டல் டிடெக்டர் கருவிகள், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரமான கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து விழா விருந்தினர்களும் முகக் கவசம் அணியும்படியும் சமூக இடைவெளியைப் பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.