ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தலைமைப் பதவியிலும் முரண்பாடு..?

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தலைமைப் பதவியிலும் முரண்பாடு..?

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை தொடர்பில் மீண்டும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.

நேற்று கூடிய விஷேட செயற்குழு கூட்டத்தின் போது இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், தலைமைத்துவ பதவிக்காக முன்னாள் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம், வஜிர அபேவர்த்தன மற்றும் தயா கமகே ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் நாளை கூடி ஆராயவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கடந்த 1994 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ பொறுப்பினை ஏற்றிருந்த ரணில் விக்கிரமசிங்க 26 வருடங்களின் அந்த பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவிக்காக ரணில் விக்ரமசிங்கவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 4 பேரும் குறித்த பதவிக்கு தகுதியற்றவர்கள் எனவும் அதற்கான சரியான நபர் சஜித் பிரேமதாசவே என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கொழும்பு பிரதான ஹோட்டலொன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் கலந்துரையாடல் ஒன்று நேற்றிரவு இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெகடர் அப்புஹாமி தெரிவித்தார்.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுகொள்ளுமாறு அழைப்பு வந்தால் மாத்திரம் அது தொடர்பில் சஜித் பிரேமதாச தீர்மானமொன்றை மேற்கொள்வார் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.