பாடசாலை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் விதம் தொடர்பில் வெளியான தகவல்..!

பாடசாலை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் விதம் தொடர்பில் வெளியான தகவல்..!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் கடந்த பொதுத் தேர்தல் நடவடிக்கைகளுக்காகவும் மூடப்பட்ட பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் அரம்பிக்கப்பட்டன.

இதன்படி,இன்றைய தினம் அதிகமான மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை தருவதனை காணக்கூடியதாய் இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

மேலதிக விடுமுறை வழங்கப்பட்டதன் பின்னர் பல கட்டங்களின் கீழ் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது

அதன்படி,11 ஆம் வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரையாகன மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் கடந்த 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதன்பின்னர்,ஏனைய வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

இதற்கமைய,200க்கும் அதிகமான மாணவர்களை கொண்ட பாடசாலைகள் மற்றும் இரண்டாம் நிலை பாடசாலைகளில் உள்ள முதலாம் வகுப்பு முதல் 06ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த பாடசாலைகளில் தரம் 05 மற்றும் 10 முதல் 13 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு வாரத்தில் 5 நாளும் கல்வி நடவடிக்கைகள் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மேற்குறிப்பிடப்பட்ட பாடசாலைகளில் 03 ஆம் வகுப்பு மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக புதன் கிழமையும்,இரண்டாம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக செவ்வாய்கிழமையும்,04ஆம் வகுப்பு மாணவர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 07ஆம் வகுப்பு மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக செவ்வாய்கிழமை மற்றும் 08ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக புதன் கிழமைகளிலும், 09ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களிலும் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் 200க்கும் குறைந்த மாணவர்கள் தொகையை கொண்ட பாடசாலைகளில்,இந்த படிமுறை முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாடசாலை செல்லும் மாணவர்கள் சுகாதார படிமுறைகளை பின்பற்ற வேண்டியது கட்டாயமானது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.