3 டெஸ்டில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து புறப்பட்டது

3 டெஸ்டில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து புறப்பட்டது

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் உள்ளன.

இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 3 மாதங்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு புறப்பட்டது.

 

ஆன்டிகுவாவில் இருந்து அந்த அணி வீரர்கள் நேற்று புறப்பட்டனர். இந்திய நேரப்படி இன்று மாலை அந்த அணி இங்கிலாந்து சென்றடையும். மான்செஸ்டருக்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சென்று அடைகிறார்கள்.

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 8-ந்தேதி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதானத்தில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 16-20 வரையிலும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜூலை 24-28 வரையிலும் மான்செஸ்டரில் நடக்கிறது.

ரசிகர்கள் இல்லாமல் காலி ஸ்டேடியத்தில் இந்த போட்டிகள் நடக்கிறது. மேலும் ஐ.சி.சி.யின் புதிய வழிகாட்டு முறைகள் இந்த டெஸ்ட் தொடரில் பின்பற்றப்படும். டேரன் பிராவோ, ஹெட் மையர், கீமோ பால் ஆகிய 3 வீரர்கள் கொரோனா வைரசுக்கு பயந்து இங்கி லாந்து செல்ல மறுத்து விட்டனர்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விவரம்:-

ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), பிளாக்வுட், பான்னெர், கிரேக் பிராத் வெயிட், புரூக்ஸ், கேம்ப்பெல், ராஸ்டன் சேஸ், கார்ன் வால், ஷானே டவுரிட்ஜ், செமர் ஹோல்டர், ஷகி ஹோப், அல்ஜாரி ஜோசப், கேமர் ரோச், யேமன் ரெய்பர்.