ஐந்து பேருக்கு எதிராக பிடியாணை

ஐந்து பேருக்கு எதிராக பிடியாணை

குருணாகலை புவனேகபாகு அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குருணாகலை நகர மேயர் உட்பட ஐந்து பேருக்கு எதிராக குருணாகலை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் படி பதில் பொலிஸ்மா அதிபரினால் குறித்த பிடியாணை பெறப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

குருணாகலை நகர மேயர், நகர சபை ஆணையாளர் மற்றும் நகரசபையின் பிரதான பொறியியலாளர் உட்பட மேலும் இருவரை கைது செய்வதற்காக நீதிமன்றத்தின் ஊடாக பிடியாணையை பெறுமாறு சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு நேற்றைய தினம் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

குருணாகலை நகர மத்தியில் அமைந்துள்ள 13 ஆவது நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட புவனேகபாகு அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி கடந்த ஜூலை 14 ஆம் திகதி உடைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, உடைக்கப்பட்டுள்ள குருணாகலை புவனேகபாகு அரச சபை கட்டிடத்துடன் தொடர்புடைய அனைத்து கோப்புகளையும் நீதிமன்றில் ஒப்படைக்குமாறு குருணாகலை மேயருக்கு குருணாகலை நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் சட்டமா அதிபர், குருணாகலை நீதவான் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் குருணாகலை நகர அபிவிருத்தி குழு கூட்டங்களுடன் தொடர்புடைய கோப்புக்கள் மற்றும் கூட்ட குறிப்புக்களை நீதிமன்றில் பெற்றுக் கொடுக்குமாறு குருணாகலை நீதவானால் வடமேல் ஆளுநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.