அமெரிக்க சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஈரானிய விஞ்ஞானி நாடு திரும்பினார்!

அமெரிக்க சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஈரானிய விஞ்ஞானி நாடு திரும்பினார்!

அமெரிக்காவில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஈரானிய விஞ்ஞானி மஜித் தாஹேரி, நாடு திரும்பியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) மஜித் தாஹேரி, தரையிறங்கியதாக ஈரானின் உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நாடு திரும்பிய ஈரானிய விஞ்ஞானி மஜித் தாஹேரியை, துணை வெளியுறவு அமைச்சர் ஹொசைன் ஜாபேரி அன்சாரி விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார்.

ஈரான் நாட்டின் விஞ்ஞானி சிரஸ் அஸ்காரி என்பவர் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் இரகசியங்களை வியாபாரம் செய்ய முயற்சித்ததாக தண்டிக்கப்பட்டிருந்தார். அவரை அமெரிக்கா விடுதலை செய்த இரண்டு நாட்களுக்குப் பிறகு அமெரிக்க கடற்படை வீரரான மைக்கேல் வைட் என்பவரை கடந்த வியாழக்கிழமை ஈரான் விடுத்தது.

ஈரானிய விஞ்ஞானி மஜித் தாஹேரியின் விடுதலை ஒரு கைதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அமெரிக்க- ஈரான் ஒத்துழைப்பின் ஒரு அரிய நிகழ்வு இதுவென விபரிக்கப்படுகின்றது. தெஹ்ரானுக்கு வந்த சிறிது நேரத்திலேயே, ஈரானின் வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஜரீஃப்பிற்கு, தாஹேரி நன்றி தெரிவித்ததாக அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் இஸ்லாமிய குடியரசின் அரசாங்கத்திற்கும், கடினமாக உழைத்த திரு.சரீஃப் உள்ளிட்ட அன்பான அதிகாரிகளுக்கும், என்னை விடுவிக்க உதவ பல மாதங்கள் எடுத்த மற்ற அதிகாரிகளுக்கும் தாஹேரி நன்றி கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.