பொதுத்தேர்தல் குறித்த விசேட வர்த்தமானி இன்று வெளியாகலாம்

பொதுத்தேர்தல் குறித்த விசேட வர்த்தமானி இன்று வெளியாகலாம்

பொதுத் தேர்தல் குறித்து பல முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (திங்கட்கிழமை) கூடி கலந்துரையாடவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் திகதி தொடர்பான முடிவு இன்றைய கூட்டத்தின் போது எடுக்கப்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைக்க மார்ச் 2 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, பொதுத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்து. இருப்பினும், நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான சுகாதார நெருக்கடி காரணமாக, தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி வரை ஒத்திவைத்தது.

இதற்கிடையில், ஜூன் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது என்று ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார், ஓகஸ்ட் இறுதிக்குள் தேர்தலை நடத்துவதில் அவர்கள் உறுதியாக இருப்பதாக குறிப்பிட்டார்.

இன்று தேர்தல் திகதி குறித்து முடிவு செய்யப்பட்டால், நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு மற்றும் வேட்பாளர்களின் விருப்பு எண்கள் தொடர்பான வர்த்தமானி இன்று மாலை வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரை சுட்டிக்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.