பதினைந்து நாட்களின் பின்னர் தோண்டியெடுக்கப்பட்ட சிசு! விசாரணையில் வெளியான பல தகவல்கள்

பதினைந்து நாட்களின் பின்னர் தோண்டியெடுக்கப்பட்ட சிசு! விசாரணையில் வெளியான பல தகவல்கள்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் டிக்கோயா தோட்ட பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து 15நாட்களுக்கு பிறகு ஆண்சிசு ஒன்று தோண்டியெடுக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் இன்று ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.ராமமுர்த்தி தலைமையில் விசாரணைகள் மேற்கொண்டு குறித்த சிசு தோண்டியெடுக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு பொதுமகன் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய ஹட்டன் பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற தோட்ட பகுதிக்கு சென்று சிசு புதைக்கப்பட்ட பகுதியினை சுற்றிவளைத்து குறித்த சிசுவின் தாயின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்ட போது, சிசு புதைக்கப்பட்ட பகுதியினை குறித்த பெண் அடையாளம் காணப்பட்டதாகவும் அந்தப் பெண் ஏற்கனவே திருமணமாகி கணவர் உயிர்ழந்துள்ளதாகவும் இரண்டு பிள்ளைகளின் தாய் எனவும் ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கடந்த ஏழாம் திகதி குறித்த சிசு குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளதாகவும் நேற்றய தினம் ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்தே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சிசு புதைக்கப்பட்ட தோட்ட பகுதிக்கு டிக்கோயா கிழங்கன் அவைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி ஹேஷான் வரவழைக்கப்பட்டு தோண்டியெடுக்கப்பட்ட சிசு தொடர்பில் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டது. தோண்டியெடுக்கப்பட்ட சிசுவின் சடலம், பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சிசுவின் தாயை இன்றய தினம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.