நான்கு பிள்ளைகளுக்கு தாய், இரண்டு குழந்தைகளுக்கு பாட்டி - 50 வயதை கடந்து 12-ம் வகுப்பில் தேர்ச்சி

நான்கு பிள்ளைகளுக்கு தாய், இரண்டு குழந்தைகளுக்கு பாட்டி - 50 வயதை கடந்து 12-ம் வகுப்பில் தேர்ச்சி

நான்கு பிள்ளைகளுக்கு தாய், இரண்டு குழந்தைகளுக்கு பாட்டி ஆனாலும் சீருடை அணிந்து மாணவியாக பள்ளிக்கூடம் சென்று படித்து 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதித்திருக்கிறார், லாகிண்டியூ சியெம்லீ. 50 வயதாகும் இவர் மேகாலயா மாநிலம் ரிபோய் மாவட்டத்திலுள்ள உம்ஸ்னிங் லுமும்பி கிராமத்தை சேர்ந்தவர்.

சிறுவயதில் கணக்கு பாடம் கடினமாக இருந்ததால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி இருக்கிறார். அதன் பிறகு திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து நான்கு குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார். ஆனாலும் இல்லற வாழ்க்கை எதிர்பார்த்தபடி அமையவில்லை.தனி யொரு பெண்மணியாக இருந்து நான்கு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்திருக்கிறார்.

சக மாணவ-மாணவிகளுடன்... லாகிண்டியூ சியெம்லீ

பிள்ளைகள் வளர்ந்ததும் 26 ஆண்டுகளுக்கு பிறகு பாதியில் நிறுத்திய படிப்பை தொடரும் ஆசை லாகிண்டியூவுக்கு வந்திருக்கிறது. 2015-ம் ஆண்டு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓப்பன் ஸ்கூலிங் எனும் திறந்தவெளிப் பள்ளியில் மாலை நேர வகுப்பில் சேர்ந்திருக்கிறார்.

அங்கு இரண்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு படித்து 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். அது உயர்கல்வியை தொடரும் ஆவலை தூண்டியிருக்கிறது. எனினும் உயர்கல்விக்கு 12-ம் வகுப்பு படிப்பு முக்கியமானது என்பதால் பள்ளிக்கூடத்திற்கு நேரடியாக சென்று படிப்பதற்கு முடிவு செய்திருக்கிறார்.

கல்வி அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று தனது கிராமத்தில் உள்ள பள்ளியில் மேல்நிலைக்கல்விபயில சேர்ந்திருக்கிறார். தாய்மொழியான காசி, அரசியல் அறிவியல், பொருளாதாரம், ஆங்கிலம் உள்ளிட்ட பாடத்திட்டத்தை தேர்வு செய்திருக்கிறார். மற்ற மாணவர்களை போலவே நேர்த்தியாக சீருடை அணிந்து பள்ளிக்கூடம் சென்று படிப்பை தொடர்ந்திருக்கிறார்.

லாகிண்டியூ சியெம்லீ

“கணக்கு பாடத்தை புரிந்து கொள்வது எனக்கும் மிகவும் கடினமாக இருந்தது. அதனால் சிறு வயதிலேயே பள்ளிப்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். பிற்காலத்தில் மழலை பள்ளி குழந் தைகளை கவனித்து கொள்ளும் வேலை எனக்கு கிடைத்தது. அது மீண்டும் படிப்பை தொடர்வதற்கு தொடக்கமாக அமைந்தது. பிள்ளைகளையும் கவனிக்க வேண்டியிருந்ததால் உடனடியாக முடிவு எடுக்க முடியவில்லை.

ஒருவழியாக போராடி 2015-ம் ஆண்டு தொலை தூர கல்வியில் சேர்ந்தேன். அங்கு கணித பாடம் சேர்க்கப்படாமல் இருந்ததால் மகிழ்ச்சி அடைந்தேன். கஷ்டப்பட்டு படித்து தேர்ச்சி பெற்றேன். 12-ம் வகுப்பு மிகவும் முக்கியமானது என்பதால் தான் பள்ளியில் சேர்ந்து படித்தேன்” என்கிறார்.

சமீபத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான தில் லாகிண்டியூ தேர்ச்சி பெற்றுவிட்டார். “நான் மூன்றாம் கிரேடில்தான் தேர்ச்சி பெற்றிருக்கி றேன். ஆனாலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு பிடித்தமான காசி மொழி யில் இலக்கியம் சார்ந்த பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறேன். கல்வியின் முக்கியத்துவத்தை நான் நன் றாக அறிந்துள்ளேன். கல்வி இல்லையென்றால் எதுவுமில்லை” என்கிறார்.

“எங்களது திறந்தவெளிப் பள்ளி யில் திருமணம் முடிந்தவர்கள், 30 வயதை கடந்தவர்கள் கூட படிக்கிறார்கள். ஆனால் 50 வயதில் ஒருவர் உற்சாகத்துடனும், அர்ப்பணிப்புடனும் வந்து படிப்பது அரிதானது. அவரை பார்த்து நாங்கள் ஆச்சரியப்படுகிறோம்” என்கிறார், அந்த பள்ளியின் முதல்வர் லாரன்ஸ்.

லாகிண்டியூவுடன் படித்த மாணவர்கள் அவரை அம்மா என்றே அழைத்திருக்கிறார்கள். நெருங்கி பழகவும் செய்திருக்கிறார்கள். அவர்களுடன் நடனம், பாட்டு, சுற்றுலா என பள்ளிக்கால நிறைவேறாத ஆசைகள் அத்தனையையும் லாகிண்டியூ பூர்த்தி செய்திருக்கிறார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தபோது இவரது மகள்களும் தாயின் கல்விக்கு உதவி செய்திருக்கிறார்கள். பலநாட்களாக இரவு நெடுநேரம் கண்விழித்து படித்து தேர்ச்சி பெற்றிருக்கிறார், லாகிண்டியூ.