நாளை முதல் பொது போக்குவரத்து வழமைக்கு..

நாளை முதல் பொது போக்குவரத்து வழமைக்கு..

நாடு தற்போது வழமைக்கு திரும்பிவரும் நிலையில் நாளை முதல் சில தொடருந்து சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து தொடருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தொடருந்து முகாமையாளர் டிலான் பெர்ணாடோ தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் எமது செய்தி பிரிவு வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

 

நாடு வழமைக்கு திரும்புகின்ற அடிப்படையில் அனைத்து தொடருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

இதேவேளை நாளை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையை வழமை போன்று முன்னெடுப்பதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்தஅமரவீர மற்றும் போக்குவரத்து சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இணக்கபாடு எட்டப்பட்டுள்ளது.

 

இதற்கமைய நாளை முதல் வழமை போன்று சேவையை முன்னெடுப்பதற்கு பேருந்து சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

 

இதேவேளை கொழும்பிலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்தை நாளை முதல் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

 

இது குறித்து எமது செய்தி பிரிவு வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

 

இதேவேளை எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மேல் மாகாணத்தில் போக்குவரத்து ஒழுங்கை விதிகள் மீள அமுல்படுத்தப்படவுள்ளது.

 

இதன்படி, பேருந்து முன்னுரிமை ஒழுங்கை விதி மொறட்டுவை முதல் புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தை வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

 

இது குறித்து கண்காணிப்பதற்காக நாளாந்தம் போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்தப்படும் காவல்துறை அதிகாரிகளுக்கு மேலதிகமாக, 500 மேலதிக அதிகாரிகளும் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.  

 

நாளை காலை 6 மணிமுதல் காலை 9 மணிவரையிலும், மாலை 4 மணிமுதல் இரவு 7 மணிவரையும் பேருந்துகளுக்கான முன்னுரிமை ஒழுங்கை விதி நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அதிகாரி இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

 

குறித்த காலப்பகுதியில் பேருந்துக்கான ஒழுங்கையில் உந்துருளிகள், மகிழுந்துகள் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் பயணிப்பதற்கு முழமையாக தடை விதிக்கப்படும்.

 

குறித்த விதிமுறையானது, எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதிவரையில் நடைமுறையில் இருந்தாலும், குறித்த காலப்பகுதியில் அது தெளிவுபடுத்தப்படும்.

 

22 ஆம் திகதியின் பின்னர் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அதிகாரி இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.