பரீட்சை நிலைய முறைகேடுகள் குறித்து மாணவர்களுக்கு அநீதி ஏற்படாதவகையில் நடவடிக்கை!

பரீட்சை நிலைய முறைகேடுகள் குறித்து மாணவர்களுக்கு அநீதி ஏற்படாதவகையில் நடவடிக்கை!

புலமைப்பரிசில் பரீட்சையில் பிரச்சினைக்குள்ளான பரீட்சை நிலையங்களில் தோற்றிய மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார்.

கொவிட்- 19 தொற்று காரணமாக பிற்போடப்பட்ட 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது, கல்கமுவ - யூடி வன்னிநாயக்க, வெலிமட - விஜய வித்தியாலயம் மற்றும் காலி ரோயல் ஆகிய பாடசாலைகளில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த பரீட்சை மையங்களில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக மாணவர்களும் பெற்றோர்களும் குற்றம் சுமத்தியிருந்தனர்.

மாணவர்களுக்கான வினாப்பத்திரங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை என்பதுடன், பரீட்சை நிறைவு நேரத்திற்கு முன்னதாகவே குறித்த வினாப்பத்திரங்கள் மீளப் பெறப்பட்டிருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில், தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.