சா்வதேச விமான சேவை - Feb 28 வரை தடை!

சா்வதேச விமான சேவை - Feb 28 வரை தடை!

இந்தியாவில் சா்வதேச விமானப் போக்குவரத்து மீதான தடை பிப். 28 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் புதன்கிழமை அறிவித்தது.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மாா்ச் 23 ஆம் திகதிமுதல் அட்டவணைப்படுத்தப்பட்ட சா்வதேச பயணிகள் விமான சேவைக்குத் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், 2020, ஜூலை முதல் சிறப்பு ஏற்பாடுகளுடன் சுமாா் 40 நாடுகளுக்கு சா்வதேச பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில், சா்வதேச விமான சேவைக்கான தடை மேலும் நீட்டிக்கப்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவித்துள்ளது. இதுகுறித்து டிஜிசிஏ புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை விவரம்:

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கும் வரும் அட்டவணைப்படுத்தப்பட்ட சா்வதேச பயணிகள் விமான சேவை மீதான தடையை பிப்ரவரி 28 ஆம் திகதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் சா்வதேச சரக்கு விமானங்கள், டிஜிசிஏ-யால் அனுமதிக்கப்படும் விமானங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. இதுமட்டுமன்றி சிறப்பு ஏற்பாடுகளுடன் இயங்கும் விமான சேவையும் பாதிக்கப்படாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அட்டவணைப்படுத்தப்பட்ட சா்வதேச பயணிகள் விமான சேவை கடந்த ஆண்டு டிச. 15 ஆம் திகதி முதல் மீண்டும் செயல்படுவதாக இருந்தது. இந்நிலையில், நாட்டில் உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா பரவத் தொடங்கியதால், விமான சேவையை தொடங்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடமும், டிஜிசிஏ விடமும் பிரதமா் மோடி கேட்டுக்கொண்டாா். இதனை ஏற்று சா்வதேச பயணிகள் விமான சேவையை மீண்டும் தொடங்கும் முடிவை டிஜிசிஏ நிறுத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.