இன்றைய கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இன்றைய கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதி வரையில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

அவர்களில் ஓமானில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 3 பேரும், கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் தொற்றுறுதியானவருடன் தொடர்பை பேணிய ராஜாங்கனை மற்றும் லங்காபுர பகுதி;களை சேர்ந்த 2 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் கொவிட்19 தொற்றுறுதியானவருடன் தொடர்பை பேணிய கண்டி - குண்டசாலையை சேர்ந்த 2 பேருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 653 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் 654 பேர் தொடர்ந்தும் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம் கொவிட் - 19 தொற்றால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 7 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1988 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கந்தகாடு போதைப்பொருள் புனர்வாழ்வு அளிப்பு மையத்தில் அடையாளங் காணப்பட்ட கொத்தணிக்கு அமைய சுமார் 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் கொரோனா பரவல் காரணமாக மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இராஜாங்கணையின் 1,3,5 ஆகிய பிரிவுகளில் இதுவரை 16 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பொரளை மெகஸின் வீதியினை சேர்ந்த 50 பேரிடம் கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியினால் இன்று பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதேநேரம் ராகமை தனியார் மருத்துவமனையில் சேவை புரியும் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதியானதுடன் அவர் அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக அந்த மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.