ஈரானில் சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்க கடற்படை வீரர் விடுதலை: ட்ரம்ப் ஈரானுக்கு நன்றி!

ஈரானில் சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்க கடற்படை வீரர் விடுதலை: ட்ரம்ப் ஈரானுக்கு நன்றி!

ஈரானில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்க கடற்படை வீரரான மைக்கேல் வைட், விடுவிக்கப்பட்டமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

48 வயதான மைக்கேல் வைட் விடுவிக்கப்பட்டமை குறித்து ட்ரம்ப் கூறுகையில், ‘நான் பதவியேற்றதிலிருந்து நாங்கள் இப்போது 40இற்க்கும் மேற்பட்ட அமெரிக்க பணயக்கைதிகள் மற்றும் கைதிகளை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளோம். ஈரானுக்கு நன்றி! இது ஒரு ஒப்பந்தம் சாத்தியம் என்பதைக் காட்டுகிறது!’ என கூறினார்.

அத்துடன், ஈரானில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள மைக்கேல் வைட், சூரிச் நகரில் இருந்து தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

ஈரான் நாட்டின் விஞ்ஞானி சிரஸ் அஸ்காரி என்பவர் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் இரகசியங்களை வியாபாரம் செய்ய முயற்சித்ததாக தண்டிக்கப்பட்டிருந்தார். அவரை அமெரிக்கா விடுதலை செய்தது. அதைத் தொடர்ந்து அவர் ஈரான் திரும்பியுள்ளார்.

இதற்கு பதிலாக மைக்கேல் வைட்டை தற்போது ஈரான் விடுதலை செய்துள்ளது. இவர் கடந்த மார்ச் மாதம் மருத்துவ காரணங்களையொட்டி தற்காலிகமாக விடுவிக்கப்பட்டு, தெஹ்ரானில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் அவர் விடுவிக்கப்பட்டு சுவிஸ்லாந்து விமானத்தால் அங்கு அனுப்பிவைக்கப்பட்டு, மீண்டும் அமெரிக்கா திரும்பவுள்ளார்.
மைக்கேல் வைட் இணைய வழியுடாக அறிமுகமான தனது காதலியை சந்திப்பதற்கு, கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஈரானின், மஷாத் நகரிற்கு சென்றிருந்தார்.

அப்போது நாட்டின் உயர்மட்ட தலைவரை அவமதித்ததாகவும், ஒரு தனியார் புகைப்படத்தை பகிரங்கமாக காட்சிப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். அதற்காக அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்தநிலையிலேயே அவர் நாடு திரும்பியுள்ளார்.