அனில் ஜாசிங்க விடுத்துள்ள எச்சரிக்கை!

அனில் ஜாசிங்க விடுத்துள்ள எச்சரிக்கை!

ஸ்ரீலங்காவின் வெலிகடை சிறைச்சாலைக்குள் கொரோனா வேகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஏராளமான கைதிகள் குறித்த பிரதேசத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளமையால் இந்த அச்சம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவாவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்ட கைதிகளின் சுகாதாரப் பாதுகாப்பு குறித்த எந்தவொரு திட்டங்களும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

வைரஸை கட்டுப்படுத்த குறைந்தது ஒரு மீற்றர் இடைவெளியை பேணுமாறு சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் சிறைகளில் ஒரு அங்குல இடைவெளியேனும் இல்லை.

சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த யோசனைகள் மார்ச் 16 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மீள் பரிசீலனை செயன்முறையை முறையாக அமுல்படுத்தினால் சிறைகளில் ஏற்படும் நெரிசல் குறைவடையும்.

பிணை வழங்கப்பட்ட ஏராளமான கைதிகள் அண்மைய காலங்களில் விடுவிக்கப்பட்டாலும், சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் கட்டுப்படுத்த அது போதுமானதாக இல்லை.

கடந்த மார்ச் மாதம் அநுராதபுரம் சிறைச்சாலையின் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அச்சமடைந்த கைதிகள் நடத்திய போராட்டத்தின்போது சிறைக் காவலர்களால் இரண்டு கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தமது சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி கைதிகள் நடத்திய”போராட்டத்தை கட்டுப்படுத்த சென்ற அதிகாரிகள்” துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் பின்னர் உறுதிப்படுத்தினர்.

கைதிகள் சமூகத்தின் ஒரு பகுதியாக கருதப்படாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதை கடந்த சில வருடங்களாக காணக்கூடியதாக உள்ளது.

சிறைகளில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதோடு கைதிகள் மனிதாபிமானத்தோடு நடப்பட வேண்டுமென குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.