பேருந்தில் இருந்து தூக்கியெறியப்பட்ட 19 வயது இளம்பெண்: கொரோனா சந்தேகத்தால் பறிபோன உயிர்!

பேருந்தில் இருந்து தூக்கியெறியப்பட்ட 19 வயது இளம்பெண்: கொரோனா சந்தேகத்தால் பறிபோன உயிர்!

உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா பரவி இருக்கும் என்ற சந்தேகத்தால் 19 வயது இளம்பெண் ஒருவர் பேருந்தில் இருந்து சக பயணங்களால் தூக்கி எறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண் அன்ஷிகா என்பவர் தனது தாயாருடன் பேருந்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அன்ஷிகாவுக்கு கொரொனாதான் என்று சந்தேகம் அடைந்த சக பயணிகள் அவரை ஒரு போர்வையால் மூடி அப்படியே தூக்கி எறிந்துள்ளனர். இதனால் சாலையில் விழுந்த அன்ஷிகா படுகாயமடைந்து சாலையிலேயே உயிரிழந்துள்ளார். சக பயணிகளிடம் அன்ஷிகா தாயார் கெஞ்சிக் கேட்டுக் கொண்டும் அவர்கள் கொடூரமாக இந்த செயலை செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அன்ஷிகாவின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது பிரேத பரிசோதனையில் மாரடைப்பு காரணமாக அன்ஷிகா மரணம் அடைந்ததாக முடிவு வந்து இருப்பதாகவும் அதனால் வழக்கு பதிவு செய்ய முடியாது என்றும் காவல்துறையினர் கூறியுள்ளதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து அன்ஷிகாவின் சகோதரர் இதுகுறித்து பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் பின்னரே மாதர் சங்கம் இந்த விஷயத்தில் தலையிட்டு வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியதாகவும், இதனடிப்படையில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு பேருந்திலிருந்து அன்சிகாவை தூக்கி எறிந்தவர்கள் யார் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் செய்தி வெளிவந்துள்ளது.

தனது சகோதரிக்கு எந்த வித உடல் பாதிப்பும் இல்லை என்றும், குறிப்பாக கொரோனா பாதிப்பு இல்லை என்றும் எனவே தனது தங்கையை பேருந்தில் இருந்து தூக்கி எறிந்தவர்களை தான் சும்மா விடப்போவதில்லை என்றும் அவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் எனவும் அவரது சகோதரர் கேட்டுக் கொண்டுள்ளார்.