சுஷாந்த் குறித்து கருத்து பதிவிட்ட நடிகையின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

சுஷாந்த் குறித்து கருத்து பதிவிட்ட நடிகையின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

பிரபல இந்தி நடிகை பாயல் ரோஹாட்கி. இவர் டுவிட்டர் பக்கத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு மறைந்த அரசியல் தலைவர் பற்றி தவறாக பேசி போலீசாரின் கைது நடவடிக்கையில் சிக்கி பின்னர் ஜாமீனில் வந்தார்.

கடந்த சில நாட்களாக இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து டுவிட்டரில் ஆவேசமான கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாயல் ரோஹாட்கியின் பதிவுகள் குறித்து டுவிட்டர் இந்தியாவுக்கும் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து அவரது கணக்கை டுவிட்டர் தற்காலிகமாக முடக்கியது.

பாயல் ரோஹாட்கி

இது பாயல் ரோஹாட்கிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. டுவிட்டரை சாடி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் “எனது டுவிட்டர் கணக்கை முடக்கி உள்ளனர். அதற்கான காரணத்தை எனக்கு தெரிவிக்கவில்லை. டுவிட்டர் இந்தியா யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்று தெரியவில்லை. நான் உண்மையை பேசினேன். சமூகத்துக்கு எதிராக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனக்காக மக்கள் குரல் கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.