கொரோனா வைரஸ் பாதிப்பு – சர்வதேச ரீதியில் 6ஆவது இடத்தில் இந்தியா

கொரோனா வைரஸ் பாதிப்பு – சர்வதேச ரீதியில் 6ஆவது இடத்தில் இந்தியா

கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா உலகளவில் 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.36 இலட்சத்தை கடந்துள்ள நிலையில், 1.14 இலட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஜூன் 30ஆம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகின்றன.

பொருளாதார நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதாலும் பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வடைகின்றது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்வடைகின்றது.

இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 236,657 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 294 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6649 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 114,073 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 115,935 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 80 ஆயிரத்தை தாண்டியது. மொத்தம் 80229 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 28694 பேருக்கும், டெல்லியில் 26334 பேருக்கும், குஜராத்தில் 19094 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.