கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதியான 46 பேருக்கு தடுப்பூசி சம்பந்தமான ஒவ்வாமை இல்லை!

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதியான 46 பேருக்கு தடுப்பூசி சம்பந்தமான ஒவ்வாமை இல்லை!

கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசியை செலுத்திக் கொண்ட 46 பேர் இன்று கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் பணியாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், அவர்கள் மயக்கம் உள்ளிட்ட ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி சம்பந்தமான ஒவ்வாமை எதுவும் இல்லை என்று கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் எமது செய்தி சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டமையால் ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என தெரியவந்திருப்பதாக வைத்தியர் சரவணபவன் தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் பதற்றம் காரணமாகவே இந்நிலைமைக்கு ஆளானதாகவும், அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

அதேநேரம் குறித்த 46 பேரில் தற்போது 15 பேர் மாத்திரமே வைத்தியசாலையில் தங்கி இருப்பதாகவும், அவர்களும் சில மணி நேரங்களில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.